அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்
அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்
UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:38 AM

நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், உயர்வுக்குப்படி என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
அதில், கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், பாலிடெக்னிக் தொழில் கல்வி, நர்சிங், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், சட்டம், அரசுத்துறை தேர்வுகளுக்கு பயின்று, வேலைவாய்ப்புகளை பெற இயலும். ஆனால், இன்றைய சூழ்நிலையில், மாணவர்கள் உயர்கல்வி பயில ஏற்படும் பயத்தினாலும், சில குடும்ப காரணங்களினாலும், உயர்கல்வி பயிலாமல் இடைநின்று விடுகின்றனர்.
அவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்வுக்குப்படி என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாணவ செல்வங்கள், அரசின் திட்டங்களை பயன்படுத்தி, 100 சதவீதம் உயர்கல்வி பயில முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பொள்ளாச்சி, டெய் ஸ்கூல் அகாடமி நிறுவனர் டெல்பின்புனிதா, தொழில் கல்வி குறித்தும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தாவரவியல் துறை இணை பேரா-சிரியர் வெஸ்லி ஆகியோர் பேசினர்.
டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீதா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.