ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 04:17 PM

மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த நாட்டின் மாகாண மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறுகையில், சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணடிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மன ஆரோக்கியத்தைக் கருதி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப் பட உள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா, இருவாரங்களுக்குள் பார்லி., யில் தாக்கல் செய்யப்படும். இந்த சட்டம் ஓராண்டுக்கு பின் நடைமுறைக்கு வரும், என்றார்.
இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவின் எட்டு மாகாண அரசுகளுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது, அரசின் முடிவுக்கு பெரும்பாலான மாகாண அரசுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த முடிவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஆஸி., லிபரல் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.