அண்ணா பல்கலை வளாகத்தில் வெளி வாகனங்களால் அத்துமீறல்
அண்ணா பல்கலை வளாகத்தில் வெளி வாகனங்களால் அத்துமீறல்
UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 11:08 AM

சென்னை:
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், வெளி நபர்களின் வாகன போக்குவரத்து உள்ளதால், பல்வேறு அத்துமீறல்கள் ஏற்படுவதாக, பல்கலை பேராசிரியர் சங்கத்தினர், உயர்கல்வி துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிண்டியில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் உள்ள அண்ணா பல்கலை வாயில் வழியாக, அரசு வாகனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் நுழைந்து, கோட்டூர்புரம் வாயில் வழியாக வெளியேறுகின்றன.
இவ்வாறு செல்லும் வாகனங்கள், மிக வேகமாக செல்கின்றன. இதனால், மாணவர்கள், பேராசிரியர்கள் பலமுறை விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதேபோல், போலீஸ் என, ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வரும் சிலர், மாணவியரை கேலி செய்வது, நகைப்பறிப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தகவல் அறிவியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் யோகேஷுக்கும், முதலாம் ஆண்டு மாணவரை இறக்கிவிட வந்தவருக்கும் இடையில், வாகனம் நிறுத்துமிடம் குறித்து வாக்குவாதம் நடந்ததில், பேராசிரியரை தாக்கி தள்ளிவிட்டதில், அவரின் இடதுகால் எலும்பு மோசமாக முறிந்துள்ளது. இதேநிலை நீடித்தால், மேலும் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நடக்கும்.
உலகப்புகழ் பெற்ற இந்த வளாகத்துக்குள் வெளியாட்களின் வாகனங்களை இயக்க தடை விதித்த நிலையில், மேலிட அழுத்தத்தால் மீண்டும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கல்வியகங்களில் உள்ளது போல், இங்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.