விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி
விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி
UPDATED : நவ 21, 2024 12:00 AM
ADDED : நவ 21, 2024 03:42 PM

சென்னை:
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட, 195 ஆராய்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் கூறினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 24வது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில், நேற்று நடந்தது. கவர்னரும், பல்கலை வேந்தருமான ரவி தலைமையில், 558 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 437 பேர் நேரடியாக பட்டங்கள் பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு கால்நடை மருத்துவ கல்லுாரியில் இளநிலை பட்ட படிப்பை நிறைவு செய்த மாணவி திலக ஈஸ்வரி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காகவும், பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காகவும், 14 பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றார்.
பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் பேசியதாவது:
கல்வி வழங்குவதோடு மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் திறம்பட செய்கிறோம். அசில் இனக் கோழிகள், தோடா எருமை இனம், சாந்திநல்லா ஆடு இனங்களை பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து, தேசிய அளவிலான விருதுகளை பல்கலை பெற்றுள்ளது.
தற்போது, பல்கலையில், 218 கோடி ரூபாய் மதிப்பிலான, 195 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. விவசாயிகளை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மரபியல் வளங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சி நடக்கிறது.
இதில், கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், நோயறிதல் தொழில்நுட்பம், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட, 89 ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:
கால்நடை மருத்துவ பல்கலையின் முன்னாள் மாணவர் என்ற பெருமை எனக்கு உண்டு. கால்நடை மருத்துவ படிப்பை பயிலும்போது, சராசரி மாணவனாகவே இருந்தேன். அதன்பின், மத்திய அரசின் இளம் விஞ்ஞானி ஊக்க திட்டத்துக்கு, ஆய்வுகளை சமர்ப்பித்து வெற்றி பெற்றேன்.
விடாமுயற்சியால் ஊக்கத்தை கைவிடாமல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் ஏழு ஆண்டுகள் போராடி வென்றேன். அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என்பதற்கு, நான் உதாரணம். தற்போது பட்டம் பெற்ற இளைஞர்களை, உலக வாழ்க்கை வரவேற்க காத்திருக்கிறது. அவை சவால் நிறைந்ததாக இருக்கும். நம்மை சுற்றி பல நெருக்கடியான சூழல் ஏற்படும்.
அந்நேரத்தில், நீங்கள் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். மதிப்பெண்கள் வெறும் எண்கள் தான். அவற்றை நம்பாமல், உங்கள் திறமைகளை மட்டும் நீங்கள் நம்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.