UPDATED : பிப் 09, 2025 12:00 AM
ADDED : பிப் 09, 2025 07:12 AM

சென்னை:
அரிய வகை நோய்களை பதிவு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் பேசினார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், அரிய வகை நோய் குறித்த கருத்தரங்கம், நேற்று நடந்தது. இதில் டாக்டர்களுக்கு, அரிய வகை நோய் பாதிப்புகள், அவற்றை கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்த கருத்தரங்கத்தில், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் ஏற்படும் அரிய வகை மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் குறித்து பதிவு செய்து, பராமரிப்பது அவசியம். அதற்கான பதிவேடு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
அரிய வகை நோய்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தைகளுக்கான மரபணு குறைபாடுகளை கண்டறி யும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. கோவை, மதுரையிலும் விரைவில் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் பேசியதாவது:
அரிய வகை நோய் பாதிப்புகளை, தாயின் வயிற்றில் கரு இருக்கும்போதே கண்டறிவதற்கான தொழில்நுட்பக் கருவிகள் வந்துள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு மரபணு குறைபாட்டால் ஏற்படும் மூளை வளர்ச்சி, வளர்சிதை பாதிப்பு, தைராய்டு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டு, தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள், அரிய வகை நோய் மற்றும் மரபணு சார்ந்த நோய் தடுப்புகளில், அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.