குறுகிய கால புகழ் எதிர்பார்க்காதீர்! இளம் எழுத்தாளர்களுக்கு அறிவுரை
குறுகிய கால புகழ் எதிர்பார்க்காதீர்! இளம் எழுத்தாளர்களுக்கு அறிவுரை
UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 09:18 AM
 பொள்ளாச்சி: 
குறுகிய கால புகழை எதிர்நோக்காமல், மக்களின் பிரச்னைகளை உணர்ந்து எழுதுமாறு, இளம் எழுத்தாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மாதாந்திர நிகழ்ச்சி, லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கவிஞர் மாயவன் வரவேற்றார்.
தொடர்ந்து, எழுத்தாளர் நிஷாந்தன் எழுதிய சாயல் சிறுகதை நுால் அறிமுகம் செய்யப்பட்டது. இலக்கிய வட்ட செய்தி கடிதத்தை பேரூர் கவிமன்றப் பொறுப்பாளர் கவிஞர் ரவி வெளியிட, குறும்பட இயக்குநர்கள் லிங்கேஷ்ஆதி, பெரியசாமி, ஹரிகரன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கவிஞர் கார்த்திக் திலகன் எழுதிய நீராக இளகும் நிழல் கவிதை நுாலை கவிஞர் ஜோதிலட்சுமி அறிமுகம் செய்தார். எழுத்தாளர் கரிகாலன் பேசுகையில், இளம் எழுத்தாளர்கள், குறுகிய கால புகழை எதிர்நோக்காமல், மக்களின் பிரச்னைகளை உணர்ந்து எழுத வேண்டும், என்றார்.
சூழலியல் சிறப்புக் கவியரங்கமும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இலக்கிய வட்டத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

