கல்வி நிறுவனத்தில் ‘நுகர்வோர் மன்றம்’ துவங்க அரசு உத்தரவு
கல்வி நிறுவனத்தில் ‘நுகர்வோர் மன்றம்’ துவங்க அரசு உத்தரவு
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து கல்வி நிறுவங்களிலும் உடனடியாக, ‘நுகர்வோர் மன்றங்கள்’ துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், போலிகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து இன்னும் பொதுமக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. பள்ளி வயதிலேயே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005ல் அனைத்துப் பள்ளிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் (கன்ஸ்யூமர் கிளப்) துவங்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 500 பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக 500 பள்ளிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டன. தற்போது இரண்டாயிரத்து 500 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இத்திட்டத்தின்படி, அரசு பதிவு பெற்ற உள்ளூர் நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நாடகங்கள், போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ள பெரும்பாலான பள்ளிகளிலும் மாதாந்திர கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவது இல்லை.
இந்நிலையில் பள்ளிகள் தவிர, அனைத்து கல்லூரிகளிலும் உடனடியாக நுகர்வோர் மன்றங்கள் துவங்கி, இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில உணவு வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உடனடியாக ‘நுகர்வோர் மன்றங்கள்’ துவங்க வேண்டும். நுகர்வோர் மன்றங்களில் தலா 100 மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
கல்லூரி முதல்வர்கள் நுகர்வோர் மன்றங்களின் தலைவர் ஆகவும், இரண்டு பேராசிரியர்கள் செயலாளர்கள் ஆகவும், மாணவர் மன்றத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் செயலாளர் ஆகவும் சேர்க்கப்பட வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும் கூட்டங்களை அரசு பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்புகள் ஒருங்கிணைத்து, மாவட்ட கலெக்டர் வாயிலாக சென்னைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு ஆண்டு விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக மூன்றாயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இதை தவிர, சிறந்த மூன்று கல்லூரிகளை தேர்வு செய்து மாவட்ட கலெக்டரும் பரிசுகள் வழங்க வேண்டும். புதிய மன்றங்களின் முதல் கூட்டங்களை உடனடியாக நடத்தி இம்மாத இறுதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
‘கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ்’ நுகர்வோர் அமைப்பை சேர்ந்த லோகு கூறுகையில், “இது வரவேற்கத்தக்க உத்தரவு. கோவை மாவட்டத்தில் 340 பள்ளிகள் இருந்தும், 2005-2006ல் 15 பள்ளிகளிலும், 2007-2008ல் 20 பள்ளிகளிலும் மட்டுமே நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்குவதன் மூலம், அடுத்த தலைமுறையினர் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களாக விளங்குவர். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

