‘இக்பாய்’ படிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் கிடையாது: ஐகோர்ட்டில் விளக்கம்
‘இக்பாய்’ படிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் கிடையாது: ஐகோர்ட்டில் விளக்கம்
UPDATED : ஆக 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘ஐதராபாத்தில் உள்ள ‘இக்பாய்’ சொசைட்டி, டேராடூனில் உள்ள ‘இக்பாய்’ பல்கலைக்கழகம் நடத்தும் வகுப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் கிடையாது’ என, சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு ‘இக்பாய்’ சொசைட்டி செயல்படுகிறது. ‘அனுமதியின்றி கல்வி மையங்களை தமிழகம் முழுவதும் ‘இக்பாய்’ நடத்தி வருகிறது.
இதனால், மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்தக் கல்வி மையங்களை மூட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தேவதாஸ் என்பவர் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ‘பெஞ்ச்,’ ‘இக்பாய்’ குறித்து வரும் புகார்களை விசாரிக்கவும், பரிந்துரை செய்யவும் ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
குழு நியமனம் குறித்து ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்குலி அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ தெரிவித்தக் கருத்துக்களைத் தொடர்ந்து, குழுவில் இருந்து விலகுவதாக நீதிபதி சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தாக்கல் செய்த பதில் மனு:
ஐதராபாத்தில் உள்ள ‘இக்பாய்’ சொசைட்டி நடத்தும் வகுப்புகளுக்கோ, டேராடூனில் இயங்கும் ‘இக்பாய்’ பல்கலைக்கழகம் நடத்தும் வகுப்புகளுக்கோ, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் பேராசிரியர் யஷ்பால் தொடுத்த வழக்கில், இக்பாய் பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்தும்.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைப்பும் தொழில்நுட்பக் கல்வியை அளிக்க முடியாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறிக்கொண்டு யாரும் தொழில்நுட்பக் கல்வியை இந்தியாவில் வழங்க முடியாது.
அனுமதியின்றி தொழில்நுட்பக் கல்வியை நடத்தும் நிறுவனங்கள் மீது ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. தொழில்நுட்பக் கல்வியில் ஒப்புதல் பெறாமல் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அவ்வாறு அனுமதியின்றி நடக்கும் கல்வி நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்.
பொதுமக்களையும் எச்சரிக்கும் விதத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அனுமதியின்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வெப்சைட்டில் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

