அமெரிக்க கட்டுரை காப்பி; பேராசிரியரை விசாரிக்க கமிட்டி
அமெரிக்க கட்டுரை காப்பி; பேராசிரியரை விசாரிக்க கமிட்டி
UPDATED : ஆக 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநெல்வேலி: அமெரிக்க பல்கலையின் கட்டுரையை காப்பியடித்து பேராசிரியர் ஒருவர் தமது பெயரில் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்படுகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவராக இருப்பவர் கிருஷ்ணன்(45). இவர் 2005ம் ஆண்டில் அதே துறையில் ‘ரீடர்’ பொறுப்பில் இருந்தார்.
பேராசிரியராக பதவி உயர்வு பெற பல்கலைக்கழக மானியக்குழுவிடம் ‘ரிமோட் சென்சிங்’ என்ற தலைப்பு உள்பட 5 கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார். அமெரிக்காவின் பெர்டியூ பல்கலைக்கழக நான்கு பேராசிரியர்கள் 1995ல் வெளியிட்ட கட்டுரையை தாம் எழுதியதாக வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து அமெரிக்க பேராசிரியர்கள் பெர்னாட் உள்ளிட்டவர்கள் தமிழக கவர்னர் பர்னாலா, பல்கலைக்கழக மானியக்குழு, நெல்லை பல்கலை துணைவேந்தர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
இதகுறித்து நெல்லை துணைவேந்தர் சபாபதிமோகன் விசாரணை நடத்தினார். அவரிடம் கட்டுரையை காப்பியடித்ததை ஒப்புக்கொண்டு பேராசிரியர் கிருஷ்ணன் அமெரிக்க பேராசிரியர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். நெல்லை பல்கலை துணைவேந்தருக்கும் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுநாள் வரையிலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் இணையதளமாக இயங்கிவந்ததை அவர் தமது கட்டுப்பாட்டில் வைத்து திருத்தங்கள் மேற்கொண்டதால் அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சில முக்கியஸ்தர்கள் முயன்றார்கள்.
இப்பிரச்னையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதோடு இன்னும் சில தினங்களில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நெல்லைக்கு வரும்போது இந்த பிரச்னை பூதாகரமாகும் என்பதால் பேராசிரியர்களை கொண்ட கமிட்டி அமைத்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

