‘நாட்டிற்கு சேவை செய்யவே பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்’
‘நாட்டிற்கு சேவை செய்யவே பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்’
UPDATED : ஆக 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “பல்கலைக்கழகங்கள் பணம் சம்பாதிக்க பட்டதாரிகளை உருவாக்க கூடாது; நாட்டிற்கு சேவை செய்ய பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்,” என, பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
கோவை பாரதியார் பல்கலை சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம், எஸ்.என்.ஆர்., கல்லூரியின் வேலை வழிகாட்டி மற்றும் மாணவர் நலத்துறை இணைந்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும் கருத்தரங்கை, கல்லூரியில் நடத்தின.
இதில் பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:
மாணவர்களிடையே சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. அவர்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் கவனம் செலுத்தவே விரும்புகின்றனர்.
கிராமப்புற கல்லூரிகளில் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களை அழைத்து வந்து பேசச்செய்ய வேண்டும்.
கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவை மட்டுமே நல்ல பண்புகளை உருவாக்கும். நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள், வாழ்க்கை முழுவதும் வெற்றி பெற்றுக்கொண்டேயிருப்பர். பணம் சம்பாதிக்க பட்டதாரிகளை உருவாக்குவதைவிட, நாட்டிற்கு சேவை செய்ய பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலையின் கடமை. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
பின், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற விஸ்வநாதன், அருள்குமார், செந்தில்குமார் ஆகியோரை பாராட்டினர். இக்கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் முரளிதரகண்ணன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

