உடனடித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பயனில்லை: மாணவர்கள் ஆதங்கம்
உடனடித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பயனில்லை: மாணவர்கள் ஆதங்கம்
UPDATED : ஆக 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதனால், சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்., மாதத்திலும், அதில் தவறுபவர்களுக்கு, செப்.,-அக்., மாதங்களிலும் நடத்தப்பட்டு வந்தது.
தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனாலும், உயர் கல்வியில் சேர விரும்புவோர் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இக்குறைபாட்டை களையும் நோக்கத்துடன், தமிழக அரசு சிறப்பு துணைத்தேர்வு நடத்தும் முறையை கொண்டுவந்தது. அதன்படி, ஜூன் மாதத்தில் நடத்தப்படும் இத்தேர்வில் மூன்று பாடங்களுக்குள் தோல்வியடைந்த மாணவர் பங்கேற்கலாம்.
முடிவுகளும் உடனடியாக வெளியிடப்பட்டு, அதே கல்வியாண்டில், உயர்கல்வியில் சேர வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டில் நடந்த குளறுபடியால், சிறப்பு துணைத்தேர்வில் வெற்றி பெற்றும், உயர் கல்வியில் சேர முடியாத நிலை, மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு ஆகஸ்ட் 12, 13, 14 தேதிகளிலும் வழங்கப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆவலுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அணுகிய போது, அங்கு அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஜூலை 22ம் தேதியுடன், அனைத்து பாலிடெக்னிக்கிலும் மாணவர் சேர்க்கையை முடித்து விட்டது. அரசு கலைக்கல்லூரிகளிலும் இதே நிலைதான்.
இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
சிறப்பு துணைத்தேர்வும் அதன் முடிவுகளும் இன்ஜினியரிங் சேரும் மாணவர்களையும், கவுன்சலிங் தேதியையும் மட்டுமே வைத்து வெளியிடப்பட்டு வருகிறது.
இன்ஜினியரிங் தவிர்த்து மற்ற படிப்புகளில் சேர மாணவர்கள் முயற்சி எடுத்தாலும், அதற்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. நடப்பாண்டில் ஏராளமான பாலிடெக்னிக் கல்லூரிகள் உருவாகி விட்டதால், குறைந்த கட்டணத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது.
இந்த கனவில் சிறப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும், கல்லூரியில் பணம் செலுத்தி, சீட்டை ‘ரிசர்வ்’ செய்து வைத்திருந்தனர். கல்லூரி நிர்வாகத்தினரும், தொழில்நுட்ப இயக்குனரகம் காலக்கெடுவை நீட்டிக்கும் என நம்பியிருந்தன. இந்நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்காமல், மாணவர் சேர்க்கை பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
சீட் காலியாக இருந்தாலும் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை பாலிடெக்னிக்குகளில் ஏற்பட்டுள்ளது. மாணவர் ஏமாற்றத்தைத் தவிர்க்க, சிறப்பு தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்டு இருக்க வேண்டும் அல்லது காலக்கெடுவை நீட்டித்திருக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியாண்டிலேயே படிப்பை தொடர வேண்டும் என சிறப்புத் தேர்வு நடத்திய தமிழக அரசு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஏன் காலக்கெடு நீட்டிக்கவில்லை?
தேர்வெழுதி தேர்ச்சி பெற்றும், கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்தாமலேயே இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஏமாற்றத்தையாவது தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

