UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: மத்திய அரசின் அனுமதியின்றி, ‘டயபட்டாலஜி’யில் சான்றிதழ் படிப்பு நடத்த தமிழக அரசுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து, இப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அமையும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை டாக்டர் பாலாஜி, மதுரை டாக்டர் பழனிகுமரன், நாமக்கல் டாக் டர் ஈஸ்வரன், கள்ளக்குறிச்சி டாக்டர் இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு:
சர்க்கரை நோய் குறித்த மருத்துவம் (டயபட்டாலஜி) மிகவும் முக்கியமானது. சென்னை மருத்துவக் கல்லூரியில், ‘டயபட்டாலஜி’யில் முதுநிலை பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் முன் அனுமதியின்றி மருத்துவக் கல்வியில், ‘டயபட்டாலஜி’ உள்ளிட்ட எந்த வகுப்பும் நடத்த முடியாது.
தற்போது, மாநில சுகாதாரத் துறை ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொலைதூர கல்வி முறையில், ‘டயபட்டாலஜி’யில் ஆறு மாத சான்றிதழ் படிப்புக்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் தான் இந்தப் படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.
நான்கு மருத்துவக் கல்லூரிகளில் 400 இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பொது நலனுக்கு எதிரானது. ‘டயபட்டாலஜி’ படிப்புக்குச் சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை.
ஆறு மாதச் சான்றிதழ் படிப்பில் மாதத்துக்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடக்கும். ஆனால். இரண்டு ஆண்டு பட்டய படிப்பில், மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். செய்முறை பயிற்சியிலும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கை, மருத்துவக் கல்வியை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.
தொலைதூர கல்வியில், ‘டயபட்டாலஜி’ முடித்தவர்களை சிகிச்சையளிக்க அனுமதியளித்தால், பயங்கர விளைவுகள் ஏற்படும். அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் குறைந்தபட்சம் 75 சதவீத வருகை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், ஆறு மாத, ‘டயபட்டாலஜி’ படிப்பில் மாணவர்கள் வருகை கண்டிப்பில்லை.
எனவே, ‘டயபட்டாலஜி’ படிப்பு தொடர்பாக கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இப்படிப்புக்காக விண்ணப்பங்களை அனுப்பக் கோரி ஜூலை மாதம் வெளியிட்ட விளம்பரம் தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசாணையை ரத்து செய்து, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன் சிலின் அனுமதியின்றி, ‘டயபட்டாலஜி’யில் சான்றிதழ் படிப்பு நடத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு வக்கீலும், தமிழக அரசின் சிறப்பு அரசு பிளீடர் சங்கரனும் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர்.
‘டயபட்டாலஜி’ சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையானது, வழக்கின் மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும் என, ‘முதல் பெஞ்ச்’ இடைக்கால உத்தரவிட்டது.

