UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியை லாபகரமாக்க, அரசின் விலை நிர்ணய கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்,” என, துணைவேந்தர் ராமசாமி பேசினார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இணைந்து ‘பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு’ குறித்த பயிற்சியை செப்.,30ம் தேதி வரை, பல்கலையில் நடத்துகிறது.
இதன் துவக்கவிழா, செப்.,10ல் நடந்தது. இதில் பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது:
பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க நடமாடும் தெளிப்பு நீர்ப்பாசன முறை அவசியம். இந்த பயிர்கள், மானாவாரி சூழலில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களுக்கு வறட்சி காலங்களில் நடமாடும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இப்பாசன முறையை பயன்படுத்த துவக்கத்தில் செலவு அதிகம் ஏற்படும். இதனால், கிராமங்களில் தெளிப்பு நீர் பாசன உபகரணத்தை வாடகை முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். இந்த பாசன முறையை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த மானியம் வழங்கி அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
உலகளவில் பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய 25 சதவீத அளவுக்கு பயறு வகை இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது மாறிவரும் சூழ்நிலையில், எதிர்கால பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு நான்கு சதவீத உற்பத்தி வளர்ச்சியை அடையவேண்டியுள்ளது. இந்த வளர்ச்சி வீதத்தை எட்ட, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
விதைப்பு மற்றும் அறுவடை செய்முறைகளை இயந்திர மயமாக்குதவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து, சாகுபடி செலவை குறைக்க முடியும். மண் பரிசோதனை அடிப்படையில் உரம் சிபாரிசு செய்யப்பட வேண்டும்.
மண், மழையளவு, சீதோஷ்ண நிலை, பாசனம், ஊடுபயிர் முறை, விதைப்பு தருணம், ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கூட்டு ஆராய்ச்சித்திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
விதைமாற்று விகிதத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை லாபகரமாக சாகுபடி செய்ய, அரசின் விலை நிர்ணய கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி பேசினார்.
இந்த விழாவில், மண் மற்றும் பயிர் மேலாண்மை மைய இயக்குனர் நடராஜன், உழவியல் துறை தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இந்த விழாவில் பல்கலை விஞ்ஞானிகள் மற்றும் மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.