‘பள்ளி மாணவர்களுக்கும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம்’
‘பள்ளி மாணவர்களுக்கும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம்’
UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விருதுநகர்: ‘பள்ளி மாணவர்களுக்கும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது அவசியம்’ என அண்ணா பல்கலை., துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
விருதுநகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வளாக நேர்முகத் தேர்வு நடத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 23 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்வி அறிவு எந்த அளவு முக்கியமோ அதே அளவு தனித்திறன் பயிற்சியும் முக்கியமாகும். இதற்காக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்களுக்கு, தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அண்ணா பல்கலைக்கழகம் கோவை, திருச்சி மற்றும் நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் மற்றும் கல்வியின் தரத்தில் எந்த வித குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. இதற்காக நான்கு துணைவேந்தர்களும் கலந்து ஆலோசித்து இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பட தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், காலப் போக்கில் தரமான கல்வியை கற்பிக்கும் வகையில் தேவையான உள் கட்டமைப்புகளுடனான இன்ஜினியரிங் கல்லூரிகளே நிலைத்து நிற்கும் வாய்ப்பு ஏற்படும்.
கம்ப்யூட்டர் அல்லாத சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளைப் படித்த மாணவர்களுக்கு ஓரளவு கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தாலே அவர்களுக்கும், கம்ப்யூட்டர் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது அவசியமாகும். இவ்வாறு கூறினார்.