UPDATED : அக் 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், காது கேளாத இரண்டரை வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது.
பெரியகாஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தை, ராமாபுரத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., இல்லம் மற்றும் காது கேளாதோருக்கான மேல் நிலைப்பள்ளி நிர்வகிக்க உள்ளது.
மையத்தில் இரண்டரை வயதிற்குட்பட்ட காது கேளாத குழந்தைகள் 30 பேர் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு காதொலிக் கருவி வழங்கப்பட்டு பேச்சுப் பயிற்சி, கேட்கும் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் ஐந்து வயதை நிறைவு செய்யும் போது சாதாரண குழந்தைகளைப் போல் பேசுகின்ற ஆற்றலுடன் சாதாரணப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு போக்குவரத்து செலவீனமாக நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் மையத்தில் வழங்கப்படும். குழந்தைகளுக்கு தேவையான காதொலிக் கருவி மற்றும் பயிற்சிப் பொருட்கள் அனைத்தும் அரசால் வழங்கப்படும்.
பயிற்சி மையத்தில் குழந்தைகளை சேர்க்க விரும்புபவர்கள் காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மறுவாழ்வு மையத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
