அரசு பள்ளியில் படித்தவர் ‘சந்திரயான்’ திட்ட இயக்குனர்
அரசு பள்ளியில் படித்தவர் ‘சந்திரயான்’ திட்ட இயக்குனர்
UPDATED : அக் 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: ‘சந்திரயான்-1’ விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா விண்ணுக்கு அனுப்பியது. சந்திரயான் திட்டத்தின் இயக்குனராக இருந்து திட்டத்தின் முழுப் பொறுப்பை ஏற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருப்பவர் மயில்சாமி அண்ணாதுரை.
இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி. தந்தை மயில்சாமி; ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். தாய் பாலசரஸ்வதி. இருவரும், பீளமேடு ராதாகிருஷ்ணா மில் குவார்ட்டர்ஸ் சி காலனியில், அண்ணாதுரை தம்பி மோகன சுந்தரத்தின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
அண்ணாதுரை தந்தை மயில்சாமி கூறியதாவது:
எனது சொந்த ஊர் கோதவாடி. நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியராக பணியாற்றினேன். எனக்கு மூன்று மகன்கள்; இரண்டு மகள்கள். குடும்பத்தின் மூத்த மகன் அண்ணாதுரை. நான் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்.
பின், கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளி, என்.ஜி.எம்., கல்லூரியில் பி.யு.சி., கோவை ஜி.சி.டி., கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,), பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்) படித்தார்.
கடந்த 1982ம் ஆண்டு, இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தார். அவரது கடின உழைப்பு, சந்திரயான் திட்டத்துக்கு இயக்குனராக நியமிக்க வைத்தது. நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம், அண்ணாதுரைக்கு உண்டு. அதன் வெளிப்பாடே, இந்தியாவின் சாதனை. எனது மகன் முன்னுக்கு வருவான் என்பது எனக்குத் தெரியும். தற்போது நாடே அவனைப் பற்றி பேசுகையில் பெருமையாக இருக்கிறது. இவ்வாறு மயில்சாமி கூறினார்.
அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம், தற்போது கற்பகம் இன்ஜி., கல்லூரியின் முதல்வராக உள்ளார். அவர் கூறியதாவது:
படிக்கும் போதே, நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்திருந்தால், மிகப்பெரிய பணக்காரராக இருந்திருப்பார். மாதம் 1.50 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அழைத்தன.
‘எல்லோரும் அமெரிக்காவுக்குப் போய்விட்டால், இந்தியாவின் வளர்ச்சியை யார் தான் பார்ப்பார்கள்’ என அடிக்கடி கேட்பார். தற்போது‘சந்திரயான்’ திட்ட இயக்குனராக இருந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். எங்களது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறது. இவ்வாறு மோகனசுந்தரம் கூறினார்.
