தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரிதாப நிலையில் பி.எச்டி., படித்த கவுரவ விரிவுரையாளர்கள்

பரிதாப நிலையில் பி.எச்டி., படித்த கவுரவ விரிவுரையாளர்கள்

பரிதாப நிலையில் பி.எச்டி., படித்த கவுரவ விரிவுரையாளர்கள்


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
தமிழக அரசு கலை கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் பலர், பி.எச்டி., பட்டம் பெற்றிருந்தும் மாதம் 4,000 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர்.
இந்த சம்பளமும் கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படாததால், சிரமத்தில்  தவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘ஷிப்ட்’ வகுப்புகள் துவங்கப்பட்டன. இரண்டு ஷிப்ட்களில் நடக்கும் வகுப்புகளை கையாள 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அரசு நியமனத்துக்காக காத்திருக்கும் இவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏமாற்றமே கிடைக்கிறது. இவர்களது சம்பளம் 4,000 ரூபாய் மட்டுமே. கடந்த ஏப்ரலுக்குப் பின் இன்னும் சம்பளம் வழங்கவில்லை; இதனால் ‘சிங்கிள் டீ’ க்கு கூட நண்பர்களிடம் கையேந்த வேண்டிய பரிதாப நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்களில் வெளியூரை சேர்ந்த சிலர் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், வாடகை கொடுக்க முடியாமல் உள்ளனர்.
கவுரவ விரிவுரையாளர்கள் சிலர் கூறியதாவது:
எங்களிடம் படிக்கும் மாணவர்கள் கூட பகுதி நேர வேலைகள் மூலம் மாதம்  8,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். கல்லூரியில் பணிபுரியும் ஐந்தாம் வகுப்பு படித்த கீழ்நிலை ஊழியர்கள் கூட மாதம் 7,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். பி.எச்டி., படிப்பு முடித்திருந்தும் பணம் இல்லாததால், இரண்டு பேர் சேர்ந்து ஒரு டீ குடிக்கிறோம்.
நிலுவை சம்பளம் வழங்க தீபாவளிக்கு முன்பே உத்தரவு வந்தும் கூட,  கடந்த ஏப்ரலுக்குப் பின் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. ஏப்ரல் வரை  கல்லூரியில் சம்பளம் வாங்கினோம். இப்போது வங்கியில் கணக்கு துவங்கினால்தான் சம்பளம் வழங்கப்படும் என்கின்றனர். சம்பளம் இல்லாமல் வங்கி கணக்கு துவக்க ரூ. 500 க்கு எங்கு போவது?
பணிபுரியும் கல்லூரிகளில் எங்களுக்கென எந்தவித விதிமுறைகளும் இல்லை. வாரத்தின் கடைசி நாள் மற்றும் முதல் நாளில் விடுப்பு எடுத்தாலோ, வேலை நிறுத்தத்தில் பங்கேற்றாலோ மூன்று நாள் சம்பளம் பிடித்தம் செய்து விடுகின்றனர்.
படிப்பறிவு இல்லாத கட்டட தொழிலாளி கூட ஒரு நாளைக்கு ரூ.150 சம்பாதிக்கும் போது, எம்.பில்., பி.எச்.டி., முடித்த எங்களுக்கு ஒருநாளைக்கு ரூ.135 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆகவே எங்கள் பணியை முறைப்படுத்தும் வரை ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.
தீபாவளிக்கு அனைவரும் போனஸ் கேட்டு போராடிக் கொண்டிருந்தனர். நாங்களோ நிலுவையில் உள்ள சம்பளமாவது கிடைக்காதா என காத்திருந்தோம். எங்கள் நிலைமையை உணர்ந்து உடனடியாக எங்களுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, கவுரவ விரிவுரையாளர்கள் புலம்பினர்.
இவர்களில் பலருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை கிடைத்த பின் திருமணம் செய்து கொள்ளும் கனவில் பல பெண் விரிவுரையாளர்கள் முதிர் கன்னியாகவே மாறி விட்டனர். நடுத்தர வயதை எட்டிவிட்ட ஆண் விரிவுரையாளர்களுக்கு பெண் கிடைப்பதில்லை. கடன் வாங்கிப் படிக்க வைத்த பெற்றோருக்கு இவர்கள் பாரமாகவே தொடர்கின்றனர்; ‘ஏன் ஆசிரியர் படிப்பை தேர்வு செய்தோம்’ என வருத்தப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us