கோவையில் வழிகாட்டி: கண்காட்சி அரங்குகளில் அலைமோதிய மாணவர்கள்
கோவையில் வழிகாட்டி: கண்காட்சி அரங்குகளில் அலைமோதிய மாணவர்கள்
UPDATED : மார் 28, 2013 12:00 AM
ADDED : மார் 28, 2013 10:00 AM
தினமலர் நாளிதழ் சார்பில், அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், "ஜெயித்துக் காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், "வழிகாட்டி" என்ற நிகழ்ச்சியும், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மத்தியில், "மேற்படிப்பில் எந்த துறையை தேர்வு செய்யலாம், அதற்கான வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம்" என்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும்.
அவற்றுக்கு விடை காணும் வகையில், "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை, ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில், நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சியை, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, "தினமலர்" நாளிதழ் நடத்துகிறது.
நேற்று நடந்த வழிகாட்டி துவக்க விழா கருத்தரங்கில், எம்.ஜி.ஆர்., பல்கலை ரெக்டார் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பல்கலை துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த, 17 ஆண்டுகளாக, மாணவர்களின் மனதில், "வழிகாட்டி" என்ற நிகழ்ச்சியின் வழியே மலர்வதால், "தினமலர்" அனைவராலும் போற்றப்படுகிறது. தளராத தன்னம்பிக்கை, நம்பகமான வழிகாட்டி, ஆக்கபூர்வமான சிந்தனை ஆகிய மூன்றையும், "தினமலர்" எடுத்து செயல்படுகிறது.
பள்ளிப் பருவம் வேறு, கல்லூரிப் பருவம் வேறு. இதை தெளிவுபடுத்தி, உங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இந்த நிகழ்ச்சி உள்ளது என்றால், அது மிகையாகாது. மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வெழுதும் நிலையை தவிர்த்து, ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் படித்தால் மட்டுமே, வாழ்க்கையில் மேம்பட முடியும்.
ஆராய்ச்சி மனப்பான்மையை, முதல் வருடம் முதலே மேம்படுத்திக் கொள்ளுங்கள். கடலில் முத்துக்கள் இருப்பது போல், துறைகளும், வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அவற்றை சரியான முறையில் தேர்வு செய்வதே, உங்கள் கடமை. பெற்றோர், தங்கள் விருப்பங்களை மாணவர்களிடம் திணிக்கக் கூடாது.
மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, துறையை தேர்வு செய்ய அனுமதியுங்கள். அரசும், மாணவர்களின் உயர் கல்விக்கு, பல உதவிகளை செய்து வருகிறது. தேசிய மற்றும் மாநில அளவில், 90 வகையான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இது சார்ந்த விழிப்புணர்வு, பெரும்பாலும் இல்லை. இந்த சலுகைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆர்., பல்கலை இணையதளத்தில் விரைவில் இது சார்ந்த முழு தகவல்களும் வெளியிடப்படும். எண்ணங்களை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள், விரிவுபடும் எண்ணங்கள் வெற்றியின் வழியை எளிதில் கண்டறிந்து விடும் . இவ்வாறு அவர் பேசினார்.
என்.ஜி.பி., கல்விக் குழும தலைவர் தவமணி பழனிசாமி, நேரு கல்வி குழும தலைவர் கிருஷ்ணகுமார், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ள கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
