UPDATED : ஏப் 04, 2013 12:00 AM
ADDED : ஏப் 04, 2013 02:47 PM
குன்னூர்: குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி கிராமத்தில் பள்ளி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பள்ளி சிறுவர்கள் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.
குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில், கலெக்டர் தலைமையில் நடந்த மனு நீதிநாள் கூட்டத்தில், "மதுபான கடை இந்த கிராமத்தில் அமைக்க கூடாது" என மனு அளித்தனர்.
ஆனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத டாஸ்மாக் நிர்வாகம், பள்ளி மற்றும் மருந்து கடை அருகிலேயே டாஸ்மாக் மது கடையை திறந்துள்ளது. குடிமகன்கள் குடித்து விட்டு பள்ளி மைதானத்திலேயே தள்ளாடி விழுவது, மைதானத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வந்தனர். மேலும், மதுக்கடை மருந்து கடை அருகிலேயே திறக்கப்பட்டுள்ளதால், உடல்நிலை குறைவால் மக்கள் மருந்து கடைக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடையை வேறு பகுதிக்கு மாற்ற மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், நேற்று காலை பெட்டட்டி சுங்கம் பகுதியில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பள்ளி சிறுவர்கள், அவர்களது பெற்றோர், எடப்பள்ளி ஊராட்சி 1ம் வார்டு கவுன்சிலர் கோமதி தலைமையில் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 300 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
தகவலறிந்த வெலிங்டன் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "இந்த மதுக் கடை ஒரு வார காலத்தில் மாற்றப்படும்" என உறுதியளித்தனர். இதன் பேரில் மக்கள் மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர்.
"கடையை டாஸ்மாக் நிர்வாகம் மாற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
