"உங்களுக்கான தேடலை கண்டுபிடியுங்கள்": மாணவர்களுக்கு உளவியலாளர் வேண்டுகோள்
"உங்களுக்கான தேடலை கண்டுபிடியுங்கள்": மாணவர்களுக்கு உளவியலாளர் வேண்டுகோள்
UPDATED : ஏப் 07, 2013 12:00 AM
ADDED : ஏப் 07, 2013 09:22 AM
சென்னை: "நீங்கள் யார் என்பதை உணருங்கள். உங்களுக்கான தேடலை கண்டுபிடியுங்கள். அப்போது தான், நீங்களும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும்" என, உளவியலாளர் கார்த்திகேயன் கூறினார்.
"தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சியில், "வாழ்வில் வெற்றியாளராவது எப்படி?" என்பது குறித்து அவர் பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் மாணவர்களுக்கு குவிந்து கிடக்கிறது. ஆனால், படிப்பை முடிந்து வரும் மாணவர்கள், அந்த வேலைக்குரிய தகுதி உள்ளவர்களாக இருப்பதில்லை.
படிப்பிற்குரிய, வேலைவாய்ப்புகளை மாணவர்களால் பெற முடிவதில்லை. எம்.பி.ஏ., முடித்த மாணவர்களில், 2 சதவீதம் பேர் மட்டுமே, சொந்த தொழில் துவங்குகின்றனர். மீதியுள்ள, 98 சதவீதம் பேர், ஏதாவது ஒரு வேலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர். ஜப்பான் நாட்டில், 70 வயது தாண்டியவர்கள், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு, தங்களின் மனித வளத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில், 50 வயதாகி விட்டாலே, வயதாகி விட்டது என கூறி, மனித வளத்தை பயன்படுத்த மறுக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்காதவர்களே, வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பட்டியலில், அதிகமாக இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்குள்ளும், ஒரு திறமை ஒளிந்திருக்கும். அந்த திறனை வெளிக்கொண்டு வர முனைவதில்லை. தங்களுக்கு, என்ன வேண்டும் என்பதை தேடாமல், கிடைத்த வாய்ப்புகளில், வாழ்க்கையை ஓட்டுவர். இதனால், ஒரு நிலைக்கு மேல், முன்னேற முடியாமல் தேங்கி விடுகின்றனர்.
நீங்கள் யார் என்பதை முதலில் உணருங்கள். உங்களுக்கான தேடலை கண்டுபிடியுங்கள். அதை மட்டுமே இலக்காக வைத்து, பயணம் செய்யுங்கள். அதற்காக கடுமையாக உழையுங்கள். அப்போது தான், வெற்றியாளர் பட்டியலில் இடம் பெற முடியும். ஒரு துறையில் சாதித்தவர்கள் எவரும், இந்த துறையில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவேன் என, கூறி வருவதில்லை. விரும்பிய துறைகளை தேர்ந்தெடுத்தால், லட்சக்கணக்கில் சம்பளம் பெற முடிகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் வேலையே வாழ்க்கையாகி விட்டது. மனதிற்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
