தனியார் பல்கலையில் பிஎச்.டி., படித்தால் விரிவுரையாளராக தகுதியில்லை?
தனியார் பல்கலையில் பிஎச்.டி., படித்தால் விரிவுரையாளராக தகுதியில்லை?
UPDATED : நவ 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
‘தனியார் பல்கலையில் பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டம் பெறுவோருக்கு, விரிவுரையாளராக தகுதியில்லை’ என, அனைத்து துணைவேந்தர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி தினமான நவ., 11ல், இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கான கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், முக்கிய விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றின் விபரம்:
பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வி மேம்பாட்டுக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 11வது ஐந்தாண்டு திட்டத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையை 16 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும், இன்னும் சில ஆண்டுகளில் 7,000 கோடி ரூபாய் செலவில் 374 மாவட்டங்களில் கல்லூரி துவக்கப்படவுள்ளது. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பெண்கள் ஆகியோரை உயர்கல்விக்கு அதிகளவில் கொண்டு வருவதே கல்லூரி துவங்குவதன் நோக்கம்.
‘செட்’, ‘நெட்’ தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, பல்கலை, கல்லூரிகளில் விரிவுரையாளராக முடியும் என பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது. பிஎச்.டி., படித்தவர்களுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
ஆனால், அனைத்து பிஎச்.டி., படிப்புக்களையும் விரிவுரையாளர் பணியில் சேர தகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. தனியார் பல்கலையில் பிஎச்.டி., பட்டம் வாங்குவோர், விரிவுரையாளர் பணிக்கு தகுதியுள்ளவராக கருதப்படமாட்டார். மாநில பல்கலை வழங்கும் பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டம் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள தாவரவியல், நுண்ணுயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகக்குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இரு பாடங்களை இணைத்தல், இரு துறைகளை இணைத்து பாடம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை பல்கலை மேற்கொள்ள, மத்திய அரசு உதவும்.
நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் முதலில் அரசின் அனுமதி பெற வேண்டும். இந்த பல்கலைக்கு, மத்திய அரசின் நிதியுதவி தேவையெனில், நிர்வாக அமைப்பை மாற்றியமைத்து, அரசுக்கும் நிர்வாக அமைப்பில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
நிகர்நிலைப் பல்கலை, தொலைதூரக்கல்வி முறையை துவக்குவதாக இருந்தால், ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி., மற்றும் அரசின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்துள்ளது.
