UPDATED : நவ 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அபராதம் விதிக்க, விளக்கம் கேட்டு மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலருக்கு, மாநில தகவல் பெறும் உரிமை கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் தேர்வுத் துறை செயலர் தாக்கல் செய்த மனு:
முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மூன்று ஆண்டுகளாக நடந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், விடைத்தாளை அளிக்கக் கோரி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு வக்கீல் ஆரோக்கிய மணிராஜ் மனு கொடுத்தார். இதை ஏற்க மறுத்து, தேர்வுக் குழு செயலர் பதில் அனுப்பினார். மாநில தகவல் பெறும் உரிமை கமிஷனில் வக்கீல் ஆரோக்கிய மணிராஜ் புகார் கொடுத்தார்.
இதை விசாரித்த மாநில உரிமை கமிஷன், ‘வக்கீல் கோரியுள்ள தகவல்கள் விதிவிலக்கின் கீழ் வராது; எனவே, அவர் கோரிய தகவல்களை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
மீண்டும் எங்கள் மீது வக்கீல் அளித்த புகாரின்படி, எங்களை விசாரணைக்கு ஆஜராக, தகவல் பெறும் கமிஷன் சம்மன் அனுப்பியது. தேர்வுக் குழுச் செயலர் ஆஜராகி விவரங்களை அளித்தார். இதையடுத்து, அதிகபட்ச அபராதம் ஏன் விதிக்கக் கூடாது எனக் கேட்டு, தேர்வுக் குழுச் செயலருக்கு தகவல் பெறும் உரிமை கமிஷன் செப். 20ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
விடைத்தாள்களின் நகல்களை பெறுவதற்கு உரிமை இல்லை. தகவல் பெறும் உரிமை கமிஷன் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் ஜி.சங்கரன் ஆஜரானார். மாநில தகவல் பெறும் உரிமை கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
