எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம்?
எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம்?
UPDATED : ஜூலை 25, 2013 12:00 AM
ADDED : ஜூலை 25, 2013 07:50 AM
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், ஜூன் 18ம் தேதி துவங்கி, 22ம் தேதி முடிவடைந்தது. இதில், தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்பட்டன.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்ள, 165 இடங்கள் உள்ளிட்ட, மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. இதில், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை, முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று பேசியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், "ராகிங்"கில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பேராசிரியர்கள் தலைமையில், "ராகிங்" எதிரான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் மாணவர்களை கண்காணிப்பர். ஒவ்வொரு தளத்திற்கும் ஒருவர் வீதம், நூலகம், விளையாட்டுத் திடல், உணவு விடுதிகளில் சோதனை மேற்கொள்வர். இவ்வாறு கனகசபை கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி , சேலம் மருத்துவக் கல்லூரி முறையே, 85, 100, 25 இடங்கள் மருத்துவப் படிப்புக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, கே.கே.நகரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 100 இடங்கள், திருவண்ணாமலையில் துவங்கப்பட்டுள்ள அரசு கல்லூரியில், 100 இடங்கள், என மொத்தம், 410 இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
வழக்கமாக ஜூலை இறுதிக்குள், இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து, எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவது வழக்கம். இம்முறை, மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட், 5ம் தேதி துவங்க உள்ளதால், எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவங்குவது ஓரிரு வாரங்கள் தாமதம் ஆகும் என தெரிகிறது.
