பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்
UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 11:04 AM
தேனி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இம்மாதம் நடத்தப்படுகிறது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 21 ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 23 ம் தேதியும், தேனி கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு போட்டி நடக்கிறது.
போட்டியில் பங்கேற்போர் பெயர்களை, அவரவர் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் அனுமதி கடிதத்துடன், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம், ஆகஸ்ட் 21ல் காலை 9 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி அன்றும் நேரில் வழங்கலாம்.
கல்லூரி மாணவர்கள், முதல்வர் மூலமாக தபாலில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், கலெக்டர் அலுவலக வளாகம், தேனி, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
போட்டி நடைபெறும் போது தலைப்புகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும், மாவட்ட அளவில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கலாம், என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.