தீவிரவாதத்தை முறியடிக்க ஆராய்ச்சி: மாணவர், ஆசிரியர்களுக்கு அழைப்பு
தீவிரவாதத்தை முறியடிக்க ஆராய்ச்சி: மாணவர், ஆசிரியர்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “கோவை பாரதியார் பல்கலை- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இணைந்து தீவிரவாதத்தை முறியபடிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான கருத்துருவை, தமிழகத்திலுள்ள கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், டிச., 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,” என, துணைவேந்தர் திருவாசம் தெரிவித்தார்.
பாரதியார் பல்கலையில் உள்ள யு.ஜி.சி.,- கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரியில் ‘மனித உரிமைகள்’ பற்றிய புத்தொளி பயிற்சி துவக்க விழா டிச. 16ம் தேதி நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:
தீவிரவாதம் என்பது ‘அரசியல் வைரஸ்’. இதை அழிப்பது எளிதான காரியமல்ல. தீவிரவாதத்தால் அனைத்தையும் இழந்து விடுகிறோம். தீவிரவாத தாக்குதலை தடுக்க, அதனால் ஏற்பட்ட விளைவுகள் மக்களை எந்தளவில் பாதித்துள்ளன என்பதைக் கண்டறிய, கல்வியாளர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் (டி.ஆர்.டி.ஓ.,) ‘தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான ஆராய்ச்சி’யை பாரதியார் பல்கலை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆராய்ச்சியில் தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர், கல்லூரி ஆசிரியர்கள் ஈடுபடலாம். இந்த ஆராய்ச்சிக்கான தங்களது கருத்துருவை டிச. 27ம் தேதி, மதியம் 12.00 மணிக்குள் பாரதியார் பல்கலையில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அன்றைய தினம் டி.ஆர்.டி.ஓ., முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான சிவதாணுப்பிள்ளை மற்றும் விஞ்ஞானிகள், சிறந்த கருத்துருவை தேர்வு செய்வர். பின், அந்த கருத்துருவுக்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள டி.ஆர்.டி.ஓ., மூன்று கோடி ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
