ஆனந்தகிருஷ்ணனுக்கு கான்பூர் பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்!
ஆனந்தகிருஷ்ணனுக்கு கான்பூர் பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்!
UPDATED : டிச 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கான்பூர் பல்கலைக்கழகத்தில் (சத்ரபதி சாகு ஜி மகராஜ் பல்கலைக்கழகம்) நவம்பர் 18ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உத்தரப்பிரதேச ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேஸ்வர் வழங்கினார்.
பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் நிகழ்த்திய பட்டமளிப்பு உரையில், கடந்த காலப் பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்காமல், எதிர்கால சவால்களை எதிர்நோக்கும் வகையில் பட்டதாரிகள் தயாராக வேண்டும் என்றார். அந்தக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் தாண்டி அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப, புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் நமது உயர்கல்வி முறை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி மிக்கதாகவும் வெளிப்படையான நிர்வாகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆனந்தகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். கான்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஹரஷ் செகல் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக இருந்த ஆனந்தகிருஷ்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநராக இருந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தமிழக முதல்வரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகவும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவராகவும் எம்.ஐ.டி.எஸ்., தலைவராகவும் இருந்தவர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது இன்ஜினியரிங் அட்மிஷனுக்காக ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறையைக் கொண்டு வந்தவர். நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான ஆய்வுக் குழுத் தலைவராக இருந்தவர். தமிழ் கணினி விசைப் பலகையைத் தரப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றதில் ஆனந்தகிருஷ்ணனுக்கு முக்கியப் பங்கு உண்டு. மத்திய, மாநில அரசுகளின் கல்வி தொடர்பான பல்வேறு ஆய்வுக் குழுக்களில் பணியாற்றியிருக்கிறார்.
தற்போது கான்பூர் ஐ.ஐ.டி.யின் ஆட்சிமன்றக் குழுத் தலைவராகவும் சயின்ஸ் சிட்டி அமைப்பின் தலைவராகவும் அவர் உள்ளார். பிரேசில் நாட்டின் உயரிய விருதையும் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா பல்கலைக்கழகத்தின் விருதையும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
