UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM
ADDED : ஜூலை 15, 2014 11:50 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ராஜராஜன் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், பொருளாதாரம், இயற்பியல், வரலாற்றுத்துறைகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஜூலை 11ல் பதிவாளர் வெளியிட்டார்.
அதில் நேரடி நேர்காணல் ஜூலை 13ல் நடைபெறும் என உள்ளது. அறிவிப்பில் சம்பளம், வயது, கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு விபரம் குறிப்பிடவில்லை. சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றவில்லை. பல்கலை விதிகளுக்கு முரணாக நியமன நடவடிக்கை உள்ளது. பணி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
உசிலம்பட்டி நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், "ஆண்டிபட்டியில் பல்கலை உறுப்புக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணிபுரிகிறேன். எனக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. என்னை பணியிலிருந்து வெளியேற்றவும், பதிவாளரின் அறிவிப்பிற்கும் தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. நாகராஜன் மனுவைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என்றார்.
