வளரும் தலைமுறை: நாட்டுக்கோழி வளர்ப்பில் பட்டதாரி வாலிபர்கள்
வளரும் தலைமுறை: நாட்டுக்கோழி வளர்ப்பில் பட்டதாரி வாலிபர்கள்
UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM
ADDED : ஜூலை 20, 2014 10:51 AM
தர்மபுரி: நாட்டுக் கோழி வளர்ப்பில் தர்மபுரி மாவட்டத்தில் பட்டதாரி வாலிபர்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வருவதால் தமிழக அளவில் தர்மபுரி மாவட்டம் முன்னேறி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டம். மாவட்டத்தில் சில ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாததால் மானாவாரி சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும் இறவை மற்றும் அணை, ஏரி, குளங்கள் பாசனமும் பாதிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாய தொழிலை கைவிட்டு அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில் நாட்டுக் கோழி வளர்ப்பு மூலம் அதிக லாபம் கிடப்பதால், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல விவசாயிகள், சுயமாகவும், ஒப்பந்த முறையிலும், நாட்டுக் கோழியை வளர்த்து வருகின்றனர். இதனால், தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம் நாட்டுக்கோழி வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதுடன், வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து, சிட்காரன்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கணேசன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சொந்தமாக தொழில் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எனவே படிப்பு முடிந்ததும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட துவங்கினேன். ஒரு நாள் ஆகும் நாட்டுக் கோழிக்குஞ்சுகளை 35 ரூபாய் வீதம் கோவையில் இருந்து வாங்கி வந்து வளர்த்து வருகிறேன். இதற்காக வீட்டிலேயே சிறிய செட் அமைத்து குஞ்சுகளை வளர்த்து வருகிறேன். அதற்குபின் அவற்றை 180 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன்.
நேரடியாக எங்களிடம் வந்து 90 நாள் வளர்ந்த நாட்டுக் கோழிகளை கிலோ 180 ரூபாய்க்கு வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் போதிய வருவாய் கிடைத்து வருவதால் தமிழக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கால்நடைத்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கால்நடை துறை அலுவலர்கள் கூறியதாவது: நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்கும் விக்கும் வகையில் புதிதாக நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வங்கிக்கடனும், இதில் 63, 500 ரூபாய் மானியம் மத்திய, மாநில அரசு சேர்ந்து வழங்கி வருகிறது.
கால்நடை துறை சார்பாக 2014- - 2015ம் ஆண்டு 60 ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 30 ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சு வழங்கப்பட்டு உள்ளது. சித்தேரியில் 75 லட்ச ரூபாய் மதிப்பில், கோழிக்குஞ்சு பொரிப்பகம் அரசு சார்பாக துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
