காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரை
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 01:42 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறைக்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான பட்டியலை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திடம், பள்ளிக்கல்வி துறை, கடந்த மாதம் கேட்டிருந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், போதுமான இடவசதி, வகுப்பறைகள், மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து உதவி, தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், லத்துார் ஒன்றியத்தில் உள்ள பெரிய வெளிக்காடு ஊராட்சி நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஒழையூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள தம்மனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, செயின் தாமஸ் மவுன்ட் ஒன்றியத்திலுள்ள, கீழ்க்கட்டளை நகராட்சி நடுநிலைப் பள்ளி என, நான்கு பள்ளிகள் கண்டறியப்பட்டு, இவற்றை தரம் உயர்த்த பள்ளிக்கல்வி துறைக்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
