தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எட்டாம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே குத்திக்கொலை!

எட்டாம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே குத்திக்கொலை!

எட்டாம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையிலேயே குத்திக்கொலை!


UPDATED : நவ 29, 2014 12:00 AM

ADDED : நவ 29, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2014 12:00 AM ADDED : நவ 29, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்டான்; மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மாணவனின் உயிர் பிரிந்தது.

தப்பியோடிய பள்ளியின் முன்னாள் மாணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.

சகஜமான பேச்சு

பந்தல்குடி அயன்கரிசல்குளத்தை சேர்ந்த ரகு, 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 8:30 மணிக்கு பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் மாரீஸ்வரன், 19, அங்கு வந்துள்ளார். ரகுவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்த மாரீஸ்வரன், தன் பையில் வைத்திருந்த கத்தியை, திடீரென எடுத்து, ரகுவின் முகம், நெற்றி, மார்பு பகுதிகளில் வெட்டி இருக்கிறார்.

அலறிய ரகுவின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்து வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் ஓடிவர, ரகுவின் தலையில் கத்தியை ஆழமாக செருகிவிட்டு, மாரீஸ்வரன் தப்பியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ரகு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரகுவின் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து, தலைமையாசிரியர், சம்சுதீன் கூறுகையில், காலை 8:30 மணிக்கு, பள்ளிக்கு வந்தேன். ஆனால், 8:10க்குள், இக்கொலை நடந்து முடிந்து விட்டது. பிளஸ் 2 மாணவர்கள், கத்தியால் வெட்டப்பட்ட மாணவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று விட்டனர், என்றார்.

ஆசிரியர்கள் எங்கே?

சம்பவம் நடந்த அரசு பள்ளி, வழக்கமாக, காலை 9:15 மணிக்கு செயல்படத் துவங்கும். கொலை நடந்த 8:30 மணி அளவில், பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை என்கின்றனர் மாணவர்கள். மேலும், காயம்பட்ட ரகுவை, பிளஸ் 2 மாணவர்கள் தான் மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருக்கின்றனர். ரகுவின் பெற்றோருக்கும் அவர்கள் தான் தகவல் சொல்லியிருக்கின்றனர். காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையும், சம்பவம் நடந்த நேரம், 8:30 என்று சொல்ல, பள்ளி தலைமையாசிரியர் சம்சுதீன் கூறியுள்ள தகவல், முரணாக உள்ளது.

காரணம் என்ன?

ரகுவுடன் படித்த அயன்கரிசல்குளத்தை சேர்ந்த மூன்று மாணவர்களிடம் போலீசார் விசாரித்ததில், திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுபற்றி காவல் துறையினர் கூறியதாவது:பந்தல்குடி பள்ளியில், 2011ல் பிளஸ் 1 படித்த மாரீஸ்வரன், தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியிருக்கிறார்.

இதன்பின், பந்தல்குடி தனியார் மில்லில் அவர் வேலை பார்த்து வந்தார்.கடந்த செப்டம்பரில் ரகு மற்றும் சில மாணவர்களை, திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்ற மாரீஸ்வரன், அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார். மறுத்த அவர்களை, சர்பத் கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளார். விஷயம் அறிந்த திருந்செந்தூர் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்; மாரீஸ்வரனையும் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மாணவர்களை காணவில்லை என, பெற்றோர் மாசார்பட்டி போலீசில் புகார் கொடுக்க, திருச்செந்தூர் போலீசார் இந்த வழக்கை மாசார்பட்டிக்கு மாற்றினர். அங்கு, சமரசத்தின்படி மாரீஸ்வரன் விடுவிக்கப்பட்டுள்ளார். மாரீஸ்வரனின் ஓரின சேர்க்கை விவகாரத்தை, ரகு ஊரில் உள்ள சிலரிடம் கூறியதால், மாரீஸ்வரன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

அந்த ஆத்திரத்தில் தான், பள்ளிச் சீருடை அணிந்து, மாணவர் போல் வந்து, ரகுவை தீர்த்துக் கட்டியுள்ளார். சம்பவத்திற்குப் பின், மாரீஸ்வரன் பைக்கில் தப்பிச் சென்றதாக தெரிகிறது. மூன்று தனி படை அமைத்து மாரீஸ்வரனை தேடி வருகிறோம். சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், இரு மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ரத்த தாகத்தில் மாணவர்கள்!

கல்விக் கூடங்களில் சமீபகாலமாய் அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள் குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: கடந்த 2012, பிப்ரவரி மாதம் சென்னை ஆசிரியை உமாமகேஸ்வரி, மாணவனை கண்டித்த காரணத்திற்காக அவனால் கொலை செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளியில் நோட்டுப்புத்தக கிழிப்பு தகராறில், மாணவன் ஒருவன் சக மாணவனால் அடித்துக் கொல்லப்பட்டான்.

தற்போது, இன்னொரு வகுப்பறை, ரத்தம் பார்த்திருக்கிறது. ஒழுக்கம் நிறைந்திருக்க வேண்டிய மாணவர்களின் மனதில், சமீப காலமாய் வன்மம் நிறைந்து விட்டது. அதை அவசரமாய் கழுவ வேண்டிய கட்டாயம், அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளிகள் பாதுகாப்பு: பெற்றோர் பீதி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள, பந்தல்குடி அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்த, பாஸ்கர் என்ற மாணவனை, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன், மாரீஸ்வரன், நேற்று காலை, கத்தியால் குத்தி கொன்றான்.

இதுகுறித்து, அரசு பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் கூறிய கருத்துக்கள்:

இன்றைக்கு அரசு பள்ளிகளில், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு, அரசு பள்ளிகளில், வன்முறைகள் பெருகி விட்டன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்களை கவனிக்க நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றனர். முன்பெல்லாம், நீதி போதனை போன்ற பாடங்கள் இருக்கும். மாணவர்களும், ஆசிரியர்களும், மனம் விட்டு பேச நிறைய நேரம் இருக்கும்.

இப்போது, மாணவர்களின் கைகளில், மொபைல் போன் இருப்பதால், பெரும்பாலான நேரத்தை அதனுடன் செலவிடுகின்றனர். தவறான செய்திகளை உடனே பரப்பி, ஒருவர் மேல் பகை கொண்டு, கூட்டாகச் சேர்ந்து தாக்குகின்றனர். மாணவர்களுக்கு, மனநல ஆலோசனைகளை வழங்க, கல்வித் துறை முன்வர வேண்டும்.

- துரைக்கண்ணன், சென்னை, சைதாப்பேட்டை

இன்றைக்கு, மாணவர்களிடையே ஒற்றுமை இல்லை. மாணவர்களிடம் ஒற்றுமையை வளர்க்க, அவர்களை சேர்ந்து விளையாட வைக்க வேண்டும். அதற்கான, உடற்கல்வி ஆசிரியர்கள் கூட, நிறைய அரசு பள்ளிகளில் இல்லை. மாணவர்களை, கண்டிப்பதற்கே ஆசிரியர்கள் பயப்படுவதால், அவர்களை கண்டுகொள்வதில்லை.

பெரும்பாலான பள்ளிகளில், பல ஆசிரியர்கள், ஒழுங்காக வகுப்புக்கு வருவதே இல்லை. அதனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடைவெளி அதிகரிக்கிறது.ஆசிரியர்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை போல் நினைத்தால்தான், அவர்களுக்கு நல்வழி காட்ட முடியும்.

- வடிவேலு, சென்னை, வடபழனி

இன்றைய காலகட்டத்தில், யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. மாணவர்கள், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் அடங்க மறுக்கின்றனர். பெற்றோர், ஆசிரியர்களை கூட தாக்கும் அளவுக்கு அவர்கள் துணிகின்றனர். அதற்கு காரணம், இன்றைய திரைப்படங்கள் தான். அடுத்து, மாணவர்கள், தங்களை விட அதிக வயதுள்ள மாணவர்களுடன் நட்பு வைத்துக் கொள்கின்றனர்.

அதனால், பலர், தவறான பாதைகளுக்கு செல்கின்றனர். சில சமயம், பெரிய மாணவர்கள், சிறியவர்களை பகடைக் காயாக பயன்படுத்தி, காரியம் சாதித்துக் கொண்டு, பலி வாங்கி விடுகின்றனர். இவற்றை எல்லாம் தடுக்க, வகுப்பு ஆசிரியரும், பெற்றோரும் ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் வகையில், பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை, ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கூட்ட வேண்டும்.

- லோகநாதன், சென்னை, வ.உ.சி., நகர்

என் மகள், சென்னை, அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறாள். எங்கள் வீடு, அசோக் நகரில் உள்ளது. அவளுக்கு, 5:00 மணிக்கு பள்ளி முடிகிறது. இதுபோன்ற செய்திகளை கேட்பதால், மாலை, சற்று நேரம் ஆனாலும், மனம் பதைபதைக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு பின், நம் பிள்ளைகளுக்குதான் அறிவுரை சொல்ல முடியும். இந்த காலத்தில், நல்ல பிள்ளையாக இருப்பதும் வினையாக முடிகிறது.

என் உறவுக்கார பையன், தனியார் பள்ளியில்தான் படிக்கிறான். அவன், முதல் மதிப்பெண் பெற்றான் என்பதற்காக, அவனை பந்தால் அடித்து, மற்ற மாணவர்கள் துன்புறுத்தி இருக்கின்றனர். நம் பிள்ளையை, அரசையும், ஆசிரியர்களையும் நம்பிதான், வீட்டில் இருந்து அனுப்பி வைக்கிறோம். அதற்கு பின், நல்லதே நடக்க ஆண்டவனை தான் நம்பியுள்ளோம்.

- கவிதா, சென்னை, அசோக் நகர்

நீதிபோதனை வகுப்புகள் அவசியம்

நம் மாணவர்கள் நல்ல செய்திகளைக் கேட்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட, நம் சமூகம் தயாராக இல்லை. பள்ளிக்கு சென்று வரும் பிள்ளைகளின் கவனம், படிப்பைத் தவிர்த்து வேறு வழியில் செல்கிறதா என்பதை பெற்றோர் கவனிப்பது இல்லை; கண்டித்தால் பிரச்னை வந்துவிடும் என்பதால், ஆசிரியர்களும் கண்டிப்பதில்லை.

சமீபத்தில், சென்னை பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவனின் தந்தையால் மூர்க்கமாக தாக்கப்பட்டார். இந்த சூழலில், ஆசிரியர் சமூகம் மாணவர் நலனில் எப்படி அக்கறை எடுக்கும்? இது ஒருபுறம் இருக்க, சமூக மாற்றத்தை தரவேண்டிய சினிமாக்களோ, பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றையே சித்தரிக்கின்றன. மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை கல்விக்கூடத்தில் கழிக்கும் நிலையில், ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் இணைந்து செயல்படும் நிலை அமைந்தால் மட்டுமே, மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்க முடியும். அதற்கு, முன் இருந்ததுபோல் நீதிபோதனை வகுப்புகள் அவசியம்.

- டாக்டர் அர்ஜுனன், மனநல மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us