ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் தவளை ஆராய்ச்சியில் டேராடூன் மாணவிகள்
ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் தவளை ஆராய்ச்சியில் டேராடூன் மாணவிகள்
UPDATED : ஜன 05, 2015 12:00 AM
ADDED : ஜன 05, 2015 11:30 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் தவளை பற்றிய ஆராய்ச்சியில் டேராடூன் மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். கொசுக்களை கட்டுப்படுத்தும் இந்த இனம் நாளுக்கு நாள் அழிந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
டேராடூன் வன உயிரின ஆராய்ச்சி மைய மாணவிகள் பிரீத்தி, ரூப்சி. தவளைகளின் செயல்பாடுகள், வாழுமிடம் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மாணவி பிரீத்தி கூறியதாவது: கொசுக்களால் ஏராளமான நோய்கள் உருவாகின்றன. கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த தவளைகள் அவசியம். உலகளவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தவளை வகைகள் உள்ளன. இந்தியாவில் 700 வகைகள் உள்ளன.
மாசு, நோய், வாழ்விடம் பிரிக்கப்படுதல் போன்றவற்றால் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வட மாநிலங்களில் குளிர்காலத்தில் தவளைகள் வெளியில் வராது. ஆனால் இங்கு வட கிழக்கு பருவமழை பெய்துள்ள நிலையிலும் வெளியில் வருகிறது. இவ்வாறு வரும் தவளைகள் பெரும்பாலும் ரோட்டில் விபத்துக்குள்ளாகி இறக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாதமாக 8 வகை தவளைகளை பார்த்துள்ளோம். இதில் தேரை வகை தவளைகளின் நடவடிக்கைகளை ஆராய்கிறோம். கிருஷ்ணன் கோவிலிருந்து கலசலிங்கம் பல்கலை வரை 1.5 கி.மீ.,துாரத்தில் மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தினமும் 30 தவளைகள் வாகனங்களில் அடிபட்டு பலியாவதை கண்டுபிடித்தோம். ஐந்து மாதங்கள் இப்பகுதியில் ஆராய்ச்சியை தொடர உள்ளோம் , என்றார். வன உயிரின காப்பாளர் அசோக்குமார். வன உயிரியிலாளர் பார்த்தீபன் உடனிருந்தனர்.
