சாத்தியப்படுமா, சமச்சீர் கல்வி : கல்வியாளர்கள் கருத்து
சாத்தியப்படுமா, சமச்சீர் கல்வி : கல்வியாளர்கள் கருத்து
UPDATED : நவ 03, 2009 12:00 AM
ADDED : நவ 03, 2009 12:11 PM
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக், ஸ்டேட் போர்டு என அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வகையான பாடத்திட்டத்தை அமைத்து, பாட நூல்களை அரசு வழங்குகிறது. முதல்கட்டமாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புகளுக்கு பொது பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதற்கு அடுத்த கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.
சமச்சீர் கல்வி என்பது சமத்துவ கல்வி; மாணவர்களின் தரத்தை உயர்த்தும் கல்வி என ஒருபுறம் ஆதரவு குரல் ஒலிக்கிறது. சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டம், அரசு பள்ளி மாணவர்களின் நிலைக்கு அதிகமாக உள்ளதால், தேர்ச்சி சதவீதம் குறையும் என மற்றொருபுறம் எதிர்ப்புக்குரலும் எதிரொலிக்கிறது. சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வருவதையொட்டி, முதல் வகுப்பு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பள்ளி கல்வித்துறை இணைய தளத்தில் 14 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன.
தமிழ் வரைவு பாடத்திட்டம் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் வரைவு பாடத்திட்டத்தை பார்த்து, கருத்துகளை பதிவு செய்யலாம்; அரசுக்கு தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது. அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வரைவு பாடத்திட்டம் மற்றும் சமச்சீர் கல்வி குறித்து கருத்து கேட்கும் கூட்டமும், கல்வி துறை சார்பில் நடத்தப்பட்டன. இதில், சமச்சீர் கல்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள், கூறப்பட்டு வருகின்றன.
திருப்பூர் பகுதி கல்வியாளர்கள் கருத்து:
மாவட்ட கல்வி அலுவலர் (பொ) நடராஜன் (கே.எஸ்.சி., பள்ளி தலைமை ஆசிரியர்): சமச்சீர் கல்வி என்பது அனைத்து மாணவர்களையும் பொது பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கிறது. மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வை போக்கும். ஆரோக்கியமான சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். கிராமப்புற மாணவர்களின் நிலை உயரக்கூடும். அதனால், முழு மனதோடு எதிர்பார்க்கிறேன். வணிக ரீதியாக அமல்படுத்த வேண்டிய ஒன்று. பாடத்திட்டங்கள், தற்போதைய தரத்தை விட சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை, சுய விருப்பங்களை ஒதுக்கி விட்டு, பொது நல சிந்தனையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். சில காலங்களுக்கு தடுமாற்றம், எதிர்ப்புகள் உண்டாகும்; அதை பொருட்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும்.
சாமிநாதன் (கே.எஸ்.சி., பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்): சமச்சீர் கல்வி என்பது தமிழகத்துக்கு புதிது என்றாலும், மற்ற மாநிலங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. கல்வி சுதந்திரத்தை கொண்டு வர, எத்தனையோ கல்வியாளர்கள் போராடி வருகின்றனர். சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்படுவதால், கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்கும். இதுவே, உண்மையான கல்வி சுதந்திரம். திட்டத்தையும், புத்தகங்களையும் அறிமுகம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது என அனைத்து தரப்பிலும், தமிழக அரசும், கல்வித்துறையும் தமிழக கல்வியின் மேல் கவனம் செலுத்தினால், குறுகிய காலத்தில் சிறப்பான கல்வி பெற்ற மாநிலமாய் தமிழகம் மாற வாய்ப்புத்தரும் சிறப்பான திட்டம்.
விஜயானந்தம் (ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை): அறிவு திறனுக்கும், மதிப்பெண் பெறுவதற்கும் மெட்ரிக் பள்ளி தான் சிறந்தது என்று அனைவரும் கருதும் நிலை மாறும். சமச்சீர் கல்வி, தேவையான திட்டம்; மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தற்போது, அரசு பள்ளிகளை விட மெட்ரிக் பள்ளிகளே அதிக அளவில் உள்ளன. படிப்புக்காக, அதிக பணத்தை பெற்றோர் செலவழிக்கின்றனர்; இவை குறையும். கல்வி முறையில் எந்த வேறுபாடும் இருக்காது. பாடப்புத்தகம், ஏழை குழந்தைகளுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்கும். குழந்தைகள், மாறி வரும் காலத்தை உணர்ந்து படிக்க வேண்டும். அரசு எவ்வித காரணங்களுக்காகவும் தாமதிக்காமல், அனைவரும் பயன்பெறும் விதத்தில், விரைந்து செயல்படுத்தினால் சிறப்பாக அமையும்.
ஈஸ்வரன் (மாநில பொதுக்குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழகம்): பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் உருவாகினாலும், தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிற்சி வகுப்பை அதிகப்படுத்த வேண்டும். வெளியிடப்பட்ட வரைவு பாடத்திட்டத்தை பார்த்ததில், கணிதத்தில் பெரிதாக மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. ஆங்கில பாடம் சற்று கடினமாக இருக்கிறது. அறிவியல் பாடம் மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகளை மையப்படுத்தி, பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேக்கடி படகு விபத்து போன்ற நிஜ சம்பவங்களை கூறி, நீச்சலின் அவசியத்தை பாடத்தில் அறிவுரையாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வி நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
மேரி விமலாபாய் (பழனியம்மாள் பள்ளி தலைமை ஆசிரியை): சமச்சீர் கல்வி என்பது தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பான, பயனுள்ள திட்டம். இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இருப்பதை போல், அனைத்து வகுப்புகளுக்கும் வர இருப்பதால், மேல்படிப்புக்குச் செல்லும் போது, மாணவர்களுக்கு பாடம், மொழி போன்ற எந்த சிரமமும் இல்லாமல் இருக்கும். அரசு பள்ளிகளில் ஆங்கில முறை கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இக்கல்விக்கு வேண்டிய வசதிகளை பள்ளிகளில் அமைக்க வேண்டும். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மெட்ரிக் பள்ளிகளுக்கு, பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்ட போது, எதிர்ப்புகள் இருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதுபோல், இதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
சவுகத் அலி (பழனியம்மாள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்): கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த உதவும்; ஏழை மாணவர்கள் பயன்பெறுவர். இதன்மூலம் சிறந்ததொரு கல்வி, அரசு பள்ளிகளுக்கு கிடைக்கும். மெட்ரிக் பள்ளிகளில் 12, 13 பாடங்கள் உள்ளன; தனித்தனியே ஆசிரியர்கள், பயிற்சி வகுப்புகள் உள்ளன. இதனால், சிறந்த கல்வி மெட்ரிக் மாணவர்களுக்கு கிடைக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இத்தகைய பாடப்புத்தகங்கள் இல்லை. அதிகமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நவீன பாடத்திட்டமும் இல்லை. மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற மேல்படிப்புக்கு செல்லும்போது, நகர்ப்புற மாணவர்களே அதிக அளவில் இடம் பெறுகின்றனர். மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு கடினமாகத்தான் இருக்கும். அதற்குபின், நல்ல பயன் கிடைக்கும் என்பது உறுதி.
சக்திதேவி (செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, தாளாளர்): சமச்சீர் கல்வி திட்டம், மறைமுகமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளை அதிகப்படுத்தும். அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்று வருவதால், மெட்ரிக் பள்ளிகள் தங்களை நிரூபிக்க உழைக்க வேண்டும். இது, சவாலானது. சிலர், இந்தியை அவசியமாக கருதுகின்றனர். இதில், அந்த குறையுள்ளது. பேங்க் மற்றும் அடிக்கடி வேலை மாற்றம் பெறும் பணிகளில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, இது ஏற்றதல்ல. எனினும் சிறப்பான கல்வி தான். இது, ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும் என்பது சந்தோஷம் தருகிறது. பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியாது. அரசு பள்ளி ஆசிரியர்கள், இதற்கு உழைக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும்; பின் சரியாகி விடும்.
ஸ்ரீனிவாசன் (வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்): ஒரே பாடப்புத்தகம் என்பது சிறப்பான ஒன்று தான். ஆனால், தற்போதுள்ள மெட்ரிக் பாடத்திட்டத்தின் நிலையை விட குறைவாக இருந்தால், பயனற்றதாகி விடும். தமிழகத்தின் கல்வித்தரம் குறையக்கூட வாய்ப்புள்ளது. மெட்ரிக் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் தரம் எந்தளவு உயரும் என்பது தெரியாது. முதலில், பள்ளி ஆசிரியர்களை, பாடத்திட்டத்துக்கு ஏற்ற விதத்தில், தயார்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் தரம் உயர வேண்டும். சில ஆண்டுகளுக்கு தடுமாற்றங்கள் இருக்கும். சமச்சீர் கல்விக்கு அரசு புத்தகம் வழங்கு வதாக கூறியுள்ளது. தமிழகத்தில் 4,400 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளுக்கும், மே, ஜூன் மாதங்களுக்குள் தயார் செய்து, எப்படி புத்தகம் வினியோகிக்கும் என்பது தெரியவில்லை. இதை அமல்படுத்த நிறைய சிரமங்கள் உள்ளன. ஆனாலும், இது சிறப்பான திட்டமே.
மதனகோபால் (விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்): மாணவர்களின் தரம் உயர்த்தப்படுவதும், குறைவதும் பாடத்திட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறே உள்ளது. தற்போது பின்பற்றப்படும் விதிமுறைகள் பாதிக்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுவது தவறான கருத்து. எத்தனை பாடங்கள் படிக்கிறோம் என்பது கணக்கில்லை; எப்படி படிக்க வைக்கிறோம் என்பதே உண்மை. மெட்ரிக் பள்ளி, அரசு பள்ளி என இரு தரப்பிலும் மாணவர்களின் நிலை மாறும். தரமான கல்வி, புதுமையான கல்வி என்று அறிமுகப்படுத்தினாலும், கிராமப்புற மாணவர்களுக்கு பயன்பட வில்லை என்றால், எந்த பயனும் இல்லை. சிறந்தது, சிறப்பற்றது என்பது இப்போது தெரியாது; நடைமுறைப்படுத்தி, பயன்படுத்துகையில் மட்டுமே தெரியவரும். இவ்வாறு, கருத்து கூறினர்.
