அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: கட்டடம் கட்ட வேண்டுகோள்
அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: கட்டடம் கட்ட வேண்டுகோள்
UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM
ADDED : ஜூலை 07, 2021 06:57 PM
கிணத்துக்கடவு:
முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலை பள்ளியில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் வகுப்பறை வேண்டும் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேரூர் கல்வி மாவட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்தின் மேற்கு பகுதியில், முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில், பள்ளி கட்டடம் ஒன்று இடிந்தது. இதனால், இரண்டு வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது காலியிடமாக உள்ளது.கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், நடப்பு கல்வி ஆண்டுக்கான, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. நேற்று வரை, பிளஸ் 1 வகுப்பில், 61 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தவிர, 9ம் வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், வகுப்புகள் நடத்த, போதிய அறைகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால், பள்ளி திறக்கப்படும்போது, மரத்தடியில் வகுப்பு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், &'மாணவர் நலன் கருதி, பள்ளிக்கு தேவையான வகுப்பறைகளை, உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,&' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
