தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?


UPDATED : நவ 25, 2009 12:00 AM

ADDED : நவ 25, 2009 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2009 12:00 AM ADDED : நவ 25, 2009 02:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புரிய வைப்போம்; வாழ வைப்போம்: ஒரே ரீதியான, சமச்சீரான கல்வி கிடைக்க வேண்டும். அது அரசுப் பள்ளியானாலும் சரி, தனியார் பள்ளியானாலும் சரி, கல்வியானது கட்டாயமாக்கப்படாமல், புரிதலின்படி இருக்க வேண்டும். மெட்ரிக் பள்ளியில், 90 சதவீதம் வாங்கும் மாணவர்கள், கணிப்பொறி இயக்குகின்றனர்; அபாகஸ் மூலம் கணிதத்திலும் திறம்பட இருக்கின்றனர். ஆனால், தன் பெயரைத் தவிர, வேறு சொல்லை தமிழில் எழுத தெரியவில்லை.


சமச்சீரான அளவுக்கு இல்லாவிடினும் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு போன்ற முக்கிய பாடத் திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சீராக இருப்பதே நல்லது.


இன்றைய மாணவர்களுக்கு, நம் தேசத்தைப் பற்றியும், கம்ப்யூட்டர் முதல் விவசாயம் வரை சிறிய வயதிலிருந்தே பதிய வைத்தால் நல்லது. சுனாமி என்னவென்பது தெரிந்தவர்கள், எப்படி நடக்கிறது என்று கேட்டால் பதில் தெரிந்தவர்கள் சொற்பமே. புவி ஈர்ப்பு மற்றும் இயற்கை, வாழ்க்கை கல்வி பற்றி தெளிவாக சொல்லிக் கொடுக்கலாம். இன்னும் காந்தி, நேரு, திருவள்ளுவர், பாரதியை மட்டும் தான் தெரியும். வேறு எதுவும் தெரியாமல், வரலாறு படித்துக் கொண்டிருக்கின்றனர்.


குடிநீரை விலையுயர்ந்த கோப்பையில் கொடுத்தாலும், சாதாரண பிளாஸ்டிக் டம்ளரில் கொடுத்தாலும், குடிநீர் குடிநீர் தான். அதை சுத்தமான நீராக கொடுப்பது மட்டுமே, நம் பொறுப்பு. பாதையை சீர் செய்து, துவங்கி விட்டால், அவர்களின் வாழ்க்கைப் பயணம் இன்பமாய் அமையும்.


ஜி.குருகுமார், திருவாரூர்.
 

வாழ்க்கைக்கு பயன் தரும் கல்வி: சமச்சீர் கல்வித் திட்டம், மாணவருக்கு பல்கலைத் திறனை விரித்து வளர்க்கும் விதம் இருக்க வேண்டும். வெறும் பள்ளியோடு தான் கற்ற கல்வியை விட்டுச் செல்லாது, தன்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் மாற்ற செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். மாணவன் ஒருவன் கற்ற கல்வியானது, ஏழு பிறவிக்கும் என வள்ளுவர் கூறியது போல் பயனுடையதாக இருக்க வேண்டும்.


அறிவியல் சிந்தனையை மாணவரிடம் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால், நாம் உண்ணும் உணவில் வைட்டமின், புரதம், கொழுப்பு போன்றவை ஒன்றோ, பலவோ அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருந்தால் தீமை அளிப்பதோடு, உண்ணுவதற்கு வெறுப்பை தூண்டக் கூடியதாகவும் மாறி விடுகிறது. அதுபோலவே மாணவனுக்கும் சமச்சீர் கல்வி வெறுப்பை தராது, விருப்பத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். தான் காணும் ஒவ்வொன்றையும் ஏன், எப்படி என்ற வினாவை தூண்டும் அளவிற்கு சமச்சீர் கல்வி அமைய வேண்டும்.


பி.மோகன்ராஜ், காஞ்சிபுரம்.


எதிர்கால இந்தியாவை செம்மைபடுத்த...: இனியொரு காலத்தில், நாமெல்லாரும் பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், அறிஞர்களாவும் இருப்போம். அப்போது பண்பில் உயர்ந்த மனிதர்களையும், நேயமிக்க நேயர்களையும், அர்ப்பணிப்பு கொண்ட ஆசான்களையும் நாம் காண்பதரிது.


அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்களை குழந்தைப் பருவம் முதலே, நாம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மாணவ மாணவியரும், நெறி தவறாத சிறந்த குடிமக்களாக தங்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவும். இதன் ஒரு பகுதியாக, நீதி போதனை வகுப்புகளும், தன்னம்பிக்கை வகுப்புகளும் இடம்பெறும் வகையில், ஒரே பாடமாக அமைக்கப்பட வேண்டும்.


புத்துணர்ச்சி இல்லாத கல்வித்திட்டம் கொடுமையானது. அனைத்து மாணவர்களும், அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும். விளையாட்டு இல்லாத கல்வி, விளையாட்டுதனமானது.


அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரிய பெருமக்கள் உதவியுடன் அரசும் முயற்சித்தால், சமச்சீர் கல்வி எதிர்கால இந்தியாவை செம்மைப்படுத்தும்.


எம்.ராஜன், மதுரை.


கலாசாரம், பண்பாடு மிக முக்கியம்: வளரும் இளைஞர் சமுதாயம், இயந்திரத் தன்மையான கல்வி முறையை கற்று, இயந்திர வாழ்க்கையை நடத்துவதால், ஏகப்பட்ட சமுதாய, குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கல்வித் திட்டங்களில் கட்டாயம் மாற்றம் தேவை. அம்மாற்றம் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை போதிப்பதாக இருக்க வேண்டும்.


குறிப்பாக, தாய்மொழி அல்லது சார்பான மாநில மொழிக் கல்வியில் கட்டாயம், நம் தேசத்தின் பாரம்பரியம், மண்ணின் பெருமையை உணர்த்தும் வகையான கலாசார கல்வி அமைய வேண்டும்.


தொழில்நுட்பம் என்பது, அவரவர் விரும்பும் துறையில் உள்ள ஈடுபாட்டின் மூலம் கற்றுக் கொள்வது இயல்பு. ஆனால், வெறும் தொழில்நுட்பம் மட்டும், வாழ்வை பண்படுத்தாது. இன்றைய காலக்கட்டத்தில், பண்பாடு கட்டாயம் அவசியம்.


நாகரிக மோகம், மேற்கத்திய நுகர்பொருள், வாணிபக் கலாசாரம் நம்மை எவ்வளவு சீரழிக்கிறது என்பதை உணர்ந்து, நமது வளரும் தலைமுறைக்கு உணர்வுப்பூர்வமான அடிப்படை கல்வி தேவை.


பாபு கிருஷ்ணராஜ், கணித விரிவுரையாளர், கோவை.


ரிங்கா ரிங்கா ரோசஸ்...: எந்தவொரு கல்வித்திட்டமும், குழந்தைகளின் தேவை, திறமை, விருப்பம், சமுதாய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே அமைக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகளுக்கு, ஆங்கிலம் கற்பதற்கு சிரமம் ஏற்படுவதற்கு காரணம், அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களை அப்படியே எடுத்து கையாளுவது தான்.


எந்த சூழ்நிலையில் பாடப்பட்டது என்று கூடத் தெரியாமல், ரிங்கா ரிங்கா ரோசஸ்... போன்ற பழைய பாடங்களை கையாளுவதை நிறுத்த வேண்டும்.


மொழி உட்பட அனைத்து பாடங்களுக்கும், லேப் ஆக்டிவிடிஸ் செயல்முறைப்படுத்த வேணடும். பல சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் உள்ளது போல, ஸ்மார்ட் போர்டு வசதிகள் செய்யப்பட்டு, பாடங்களை சுவாரசியமாக ஆக்க வேண்டும். ஆடியோ விஷூவல் எஜிகேஷன் இன்றியமையாதது.


கிரேடிங் முறையால், பெற்றோரின் மன அழுத்தமும் குறையும். இம்முறை, ஆசிரியர்களின் வேலை அதிகரித்தாலும், பாடங்களை செயல்முறை கல்வியாக போதிப்பதால், வேலை சுமையாக இல்லாமல், சுவையாக மாறும்.


எட்டாம் வகுப்பு முதலே மாணவர்கள், விருப்பபாடங்களை தேர்வு செய்யும் முறை வர வேண்டும். சமச்சீர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மட்டுமில்லாமல், இன்றைய தமிழக குழந்தைகளுக்கு தேவையான புதுமைகளையும் புகுத்தினால், இது நிச்சயமாக ஒரு வெற்றித்திட்டமாக அமையும்.


என்.ரேவதி, இந்தி ஆசிரியை, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us