தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?


UPDATED : நவ 29, 2009 12:00 AM

ADDED : நவ 29, 2009 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2009 12:00 AM ADDED : நவ 29, 2009 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வியாளர்களின் கருத்துகள் விவரம்:

அவசியத் தேவை:
இன்றைய தலைமுறையினருக்கு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். சமச்சீர் கல்வி, இன்றைய கால கட்டத்தில், மாணவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். தற்போது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது அவசிய தேவை.
ஆனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்.


சட்டம் மூலமே சமச்சீர் கல்வி சாத்தியம்:

சமச்சீர் கல்வியின் அடிப்படை ஏற்கத்தக்கது. பணக்காரர்களுக்கு வாய்ப்பாக ஒரு கல்வி முறையும், ஏழைகளுக்கு இன்னொரு கல்வி முறையும் அமைப்பது ஒரு சமமான வளர்ச்சியை உண்டாக்காது. அது ஏற்றத்தாழ்வான சமுதாயத்தை இளம் பருவத்தில் இருந்தே அமைப்பதற்கான வழிமுறையை கொண்டு வந்து சேர்க்கும்.

சமச்சீர் கல்வி முறையில் முக்கியமானது பயிற்று மொழி. தாய் மொழியை பயிற்று மொழியாகவும், ஏனைய மொழிகளை துணை மொழியாகவும் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் சமமான கல்வி முறையை தர வேண்டும். இந்த சம தன்மை, தற்போது சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ளது.

கல்வி முறை என்பது பாடத் திட்டம்(கரிக்குலம்), பாட நூல்கள்(சிலபஸ்) என்ற இரு கூறாக உள்ளது. இவற்றுள் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பாட நூல்கள் வேறுபட்டு இருக்கலாம். அண்மைக்காலமாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அதிகரித்து உள்ளதால், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சட்டம் மூலம் தான் சிக்கல்களை தீர்த்து, சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்.
க.ப. அறவாணன், முன்னாள் துணைவேந்தர்.


கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை:

பல்வேறு பாடத் திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி கொண்டு வரும் திட்டம் அருமையான திட்டம். தற்போது, வெவ்வேறு பாடத் திட்டங்கள், வெவ்வேறு தரத்தில் இருப்பதால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை மாற்றி ஒரே சீராக கொண்டு வருவது பாராட்டுக்குரியது. ஆனால், இதை முறையாக செயல்படுத்துவது அவசியம்.

மேலும், பாடத் திட்டத்தை சமச்சீராக கொண்டு வந்தால் மட்டும் போதாது; கற்கும், கற்பிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போதைய பள்ளிக் கல்வி முறை, மனப்பாடம் செய்தல், தேர்வில் மதிப்பெண் பெறுதல் ஆகிய நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்களுக்கு அலசி ஆராயும் அறிவைக் கொடுக்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும், புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கவும் கூடிய கல்வித்திட்டம் வேண்டும். அதற்கேற்ப பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அறிவியல் விதி ஒன்றை கற்பித்தால், அதை கற்பித்தலோடு நிறுத்தி விடக் கூடாது. அது எப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுகிறது என்பதை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். கல்வி முறையை, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கல்வி முறையாக மாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பது அவசியம்.
பாலகுருசாமி, யு.பி.எஸ்.சி., உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.


வேண்டாம் தத்துவம்; வேண்டும் யதார்த்தம்:
சமச்சீர் கல்வி என்பது எல்லோருக்கும் சமமாக மட்டுமில்லாமல், அனைவருக்கும் தரமானதாகவும் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், கல்வியின் தரம் குறைந்து விடக் கூடாது. அதிக திறமையுள்ள மாணவர்களின் ஊக்கத்தை குறைக்கும் விதத்தில், பாடத்திட்டம் இருந்து விடக் கூடாது.

திட்டத்தை முறையாக செயல்படுத்த, தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், கற்றல், கற்பித்தல் கருவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து அரசு ஆலோசித்து செயல்பட வேண்டும். தத்துவங்களாக பேசிவிட்டு, யதார்த்தங்களை மறந்து விடக் கூடாது.

மனித வளம் மட்டுமே நம்மிடம் உள்ளது. நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அவர்கள் பெறும் கல்விக்கும், சக்திக்கும் ஏற்ற வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர முடியவில்லை. எனவே, சர்வதேச வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையில், பாடத்திட்டம் தரமானதாக இருக்க வேண்டும். திட்டத்தை படிப்படியாகத் தான் செயல்படுத்த வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு மாவட்டத்தில், முதலில் செயல்படுத்திப் பார்க்கலாம். அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதை சரிசெய்து, மற்ற மாவட்டங்களில் அமல்படுத்தலாம். குறிப்பாக, குடியுரிமை என்ற பாடம் தற்போது இல்லை. அரசியலை தெரிந்து கொள்ளும் வகையில் உலக அறிவு, பொது அறிவு, நாட்டு நடப்புகள் குறித்த தகவல்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
-பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ.,


எட்டு மாற்றங்களை உள்ளடக்கிய உன்னத திட்டம்:

நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டம், பாடத்திட்டத்தில் ஒளிந்திருக்கும் கற்றலின் நோக்கம், பாடத் திட்டத்தின் பொருள் எடை, அதை கையாளக் கூடிய வழிமுறைகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் கற்பிக்கும் உபகரணங்கள், அதை கையாளும் கல்வி நிறுவனங்களின் அணுகுமுறை, ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் புதிய அணுகுமுறை பயிற்சிகள், மாணவர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் ஆகிய கலவை அடங்கியது தான் சிறந்த கல்வி திட்டம். இந்த வகையில், வரைவு பாடத் திட்டத்தை நான் ஆராய்ந்ததில், தரமான பாடத் திட்டமாக சமச்சீர் கல்வி திட்டம் இருக்கிறது. இந்த கல்வி திட்டம், எட்டு மாற்றங்களை உள்ளடக்கிய உன்னத திட்டமாக இருக்கிறது. அவை:

1. கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை விட, கற்கும் மாணவர்களை மையமாகக் கொண்ட பாடத் திட்டம்.
2. வகுப்பறையின் மந்த நிலையை மாற்றி, மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கு பெறும் பாடத் திட்டம்.
3. சிந்தனை, ஒரே திசையை நோக்காமல், பல்வேறு முறைகளில் சிந்திக்கும் ஆற்றல்.
4. ஒன்றுக்கொன்று உறுதுணையாக இணைக்கப்பட்ட துறைகளின் அறிவு.
5. பாடத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் இருந்து, பல வகை அறிவு சார்ந்த வகுப்பறை.
6. சராசரி மதிப்பீட்டிலிருந்து, தொடர் குழும மதிப்பீடு.
7. அறிவை கொடுப்பதிலிருந்து, அறிவை உருவாக்கும் கல்வி.
8. இறுக்கமான செயல் திட்டத்திலிருந்து, நெகிழ்வான செயல் திட்டம்.
இந்த எட்டு மாற்றங்களும், திட்டத்தின் முக்கிய மாற்றங்களாக நான் பார்க்கிறேன். எல்லா வகை பாடத் திட்டத்திலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறப்பு அம்சங்களின் கலவையாக, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இருக்கிறது. அறிவியலில் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்ல கையாளும் வழிமுறைகளையும் வரையறுத்திருக்கின்றனர்.

ஆசிரியர்களுக்கு, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி அளிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தமிழை கற்பது தடங்கலாகவும், கடினமாகவும் இருக்கும். எனவே, இந்தி போன்ற தேசிய மொழிகளுக்கும் இடம் கொடுத்தால், பிற மாநில மக்களாலும் வரவேற்கப்படும்.
முனைவர் கிஷோர்குமார், கல்வியாளர், மூத்த முதல்வர், செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி, சென்னை.


திட்டத்தின் வெற்றி, தோல்வி ஆசிரியர்களிடமே இருக்கிறது:

திட்டம் வரவேற்கக் கூடியது தான்; அதில், மாற்றுக் கருத்து கிடையாது. கல்வி முறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த முரண்பாடுகள், இந்த திட்டத் தின் மூலம் சமன் செய்யப்படும். இனி, மேல்மட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும்.

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே, திட்டத்தின் வெற்றி, தோல்வி அமையும். ஒரு பள்ளியில், சில ஆசிரியர்கள் என்றில்லாமல், அனைத்து ஆசிரியர்களும் முழுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடுமையாக உழைத்தால், சமச்சீர் கல்வி திட் டம் மகத்தான வெற்றி பெறும். மாணவர்களின் எதிர்காலம் நம்மிடம் இருக்கிறது என்ற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இந்த உணர்வு, ஒவ்வொரு ஆசிரியர்களிடமும் ஏற்பட்டால், அரசு பள்ளிகள் சாதனைப் பள்ளிகளாக மாறும். ஈடுபாட்டு உணர்வு, ஆசிரியர்களிடம் குறைவாக இருக்கிறது.

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,யில் இருந்தே ஆங்கில வழி வகுப்புகள் இருக் கின்றன. அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து தான், ஆங்கில வழி வகுப்புகள் இருக் கின்றன. சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி நகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளை கொண்டு வரலாம். ஆங்கில வழி கல்வியைத் தேடித் தான், அதிகமான பெற்றோர் கள் தங் களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அந்த ஆங்கில வழிக் கல்வியை தரமான முறையில், அரசு பள்ளிகளில் கொடுத்தால், தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையும்.
-கலாவதி, சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.


வரைவு பாடத்திட்டத்தில் இந்து மத எதிர்ப்பு?:

சமச்சீர் கல்விக்கான பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டத்தில், இந்து மத துவேஷம் மேலோங்கி இருப்பதாகத் தெரிகிறது. அதன் விவரம்: மூன்றாம் வகுப்பு (சமூக அறிவியல்): வ.எண்: 9 தாக்கத்தை ஏற்படுத்தும் மக்கள் - பாடப்பொருள் ஈ.வெ.ரா., பெரியார். மூன்றாம் வகுப்பு மாணவனிடம் என்ன தாக்கத்தை ஈ.வெ.ரா., ஏற்படுத்துகிறார்? குழந்தைகளை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூற, இப்பகுதியை வைத்திருக்கிறார்களா?

நான்காம் வகுப்பு (தமிழ்): மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள் என்ற தலைப்பில் இடம்பெறும் பாடல்கள் பாரம்பரியத்தை நையாண்டி செய்யாமல், யாரையும் மனம் புண்படுத்தாத பாடலாக இருக்க வேண்டும்.

ஐந்தாம் வகுப்பு (தமிழ்): மூடநம்பிக்கை என்ற தலைப்பு வரைவில் இடம்பெற்றுள்ளது. மூட நம்பிக்கை என்பது சமுதாயம் தொடர்பானதாக இருக்க வேண்டும்; மதம் தொடர்பானதாக இருக்கக் கூடாது. அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது. இந்து மதத்தை மட்டும் குறிவைப்பதாக இருக்கக் கூடாது.

ஆறாம் வகுப்பு (சமூக அறிவியல்): வரலாறு அலகு - 3 கட்டுக்கதை மற்றும் நாடுதல், திராவிடக் கலாசாரம், வேதகாலம், காப்பிய காலம் (சமூக அமைப்பு மற்றும் பிரிவுகள்). இதில் வேதகாலம் என்பது கட்டுக்கதையா? அப்படியென்றால் அக்காலத்தில் தோன்றிய ஆயுர்வேதம், யோகாசனம், வேதங்கள், உலக உண்மை தத்துவவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்றும் வாழ்கிற வேத தத்துவங்கள் கட்டுக் கதையா?

ஆரிய, திராவிட இனவாதம் பேசி, மாணவப் பருவத்திலேயே பிரிவினை எண்ணத்தைத் தூண்டுவது இந்த பாடத்தின் நோக்கமா? ஆரியர் பற்றி உயர்வாகக் கூறுவதாகக் கூறி, சோமபாணம், சுராபாணம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஆரிய கலாசாரத்தின் உண்மையான பெருமையை வெளிப்படுத்தும் பாடம் வேண்டும்.

அப்பெருமைக்கு சற்றும் சளைக்காமல், திராவிட கலாசாரம் இருந்தது எனக் கூற வேண்டும். இரு கலாசாரத்திலும் ஒத்த கருத்துகளை வெளிக்கொணர வேண்டும்.

ஏழாம் வகுப்பு (தமிழ்): துணைப்பாடம் - அன்னை தெரசா: மதத்தைத் தாண்டி சேவை செய்யும் அமைப்புகளாக, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மாதா அமிர்தனந்த மாயி மடம், சாய் சேவா சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. அன்னை தெரசாவின் தொண்டு பற்றி எழுதும்போது, இந்த மடங்களின் சேவைகள் பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

உரைநடை- நம் அன்றாட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது மூட நம்பிக்கையா? அறிவியலா? (விவாதித்தல்). இதற்கு பதில், நேரடியாக, இந்துக்களின் ஆன்மிகமா அல்லது அறிவியலா என்று கேட்டிருக்கலாம். இத் தலைப்பை மாற்ற வேண்டும். அறிவியலை மட்டும் படிக்கச் செய்து, மாணவர்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிலையை உருவாக்கிவிடாதீர்கள்.

துணைப்பாடம் - மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அமைந்த கதை: இந்து மதத்தை இழிவுபடுத்துதாக இந்த கதையை அமைக்கக் கூடாது.

ஏழாம் வகுப்பு (சமூக அறிவியல்) அலகு - 2 இஸ்லாமியர்கள் வருகை: முஸ்லிம் மன்னர்களின் வருகை பற்றிய மாற்றுக் கருத்து உண்டு. அதனால் அவர்கள் வருகை பற்றி கவனமாக எழுத வேண்டும்.

எட்டாம் வகுப்பு (தமிழ்): இன்றைய காலகட்டத்தில் விழாக்கள் அவசியமா?ஆடம்பரமா? இது அரசியல்வாதியின் பிறந்த நாள் பற்றியா? புத்தாண்டு கொண்டாட்டமா? கிறிஸ்துமஸ் விழாவா? ரம்ஜான் பற்றியதா? இந்தத் தலைப்பில் இந்து மத விழாக்களை பற்றிய கருத்துகளை மட்டுமே தெரிவிக்கக் கூடாது.

(சமூக அறிவியல்): அலகு - 1 முகலாயர்கள்: அக்பர் காலத்தை தவிர மற்ற அனைத்து முகலாய அரசர்களும், இந்துக்களை கொடுமைப்படுத்தியவர்களே. அதை விரிவாக விளக்குவீர்களா? இடிக்கப்பட்ட இந்து கோவில்கள் பற்றிய விளக்கத்தை கொடுப்பீர்களா? சீக்கிய மதம் தோன்றியதன் அடிப்படை நோக்கம் தெரியுமா?

ஒன்பதாம் வகுப்பு (சமூக அறிவியல்) அலகு - 1: ஆற்றுச் சமவெளி நாகரீகம் இதில் ஜுடோயிசமும், கிறிஸ்தவமும் ஏன் வருகிறது? இவர்களுக்கும் ஆற்றுச் சமவெளி நாகரீகத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகில் ஆற்றுச் சமவெளி நாகரீகம் இருந்தபோது, இருந்த ஒரே சமயம் இந்து சமயம் மட்டுமே.

அலகு - 2: இடைக்காலம் நிலமானிய முறை - திருச்சபைகளின் பங்கு, அரேபியர்களின் நாகரீகம் மற்றும் இஸ்லாமியர்களின் நன்கொடைகள்: இந்த வரைவு திட்டத்தில் எதை வைத்து இடைக்காலம் என பிரித்துள்ளீர்கள்? திருச்சபைகளுக்கும், நில மானியத்திற்கும் என்ன சம்பந்தம்? திருச்சபைகள் வருவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் இனாமாக கோவில்களுக்கும், ஆதீனங்களுக்கும் நிலங்களை அளித்துள்ளனர். நில மானிய முறையின் வரலாற்றை எழுதினால், அதில் நம் கோவில்களும், ஆதீனங்களுமே வழிகாட்ட முடியும்.

பத்தாம் வகுப்பு (தமிழ்): பெரியாரின் விழிப்புணர்வு சிந்தனைகள்: இது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் பற்றியதா? பெண் விடுதலை பற்றியதா? இந்து மத எதிர்ப்பு பற்றியதா? இந்து மத துவேசம் இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.

கம்ப ராமாயணம் இல்லை: செய்யுள் பகுதியில் கம்ப ராமயணமே இல்லை. கம்ப ராமாயணம் படிக்காமல் தமிழை, தமிழின் வளத்தை எந்த கவிஞனைக் கொண்டு விளக்கப் போகிறீர்கள்? இப்போது பாடத்திட்டத்தில் உள்ளது போல், கம்ப ராமாயணத்தில் ராமனை இழிவாகப் பேசும் வாலி, சூர்ப்பணகை, ராவணன் போன்றவர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து வைக்காமல், கம்பனின் கவிநயம் மிக்க பாடல்கள் இருக்க வேண்டும்.

ராவண காவியம் போன்ற எதிர் கதாநாயக காப்பியங்களை பாடத்திட்டத்தில் வைத்து, அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றவனை கதாநாயகன் ஆக்காதீர்கள்.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாய் இருந்து வரும் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வள்ளாலாரின் திருமுறைகள், கம்ப ராமாயாணம், கந்த புராணம், வில்லிபாரதம், பாரதியார் கவிதைகள் போன்ற இலக்கியங்களில் இருந்து செய்யுள் பகுதிகள் 80 சதவீதம் இருக்க வேண்டும்.
- கார்த்திகேயன், இந்து சமய நற்பணி மன்றத் தலைவர், பட்டுக்கோட்டை.


சீரிய கல்வி பெற்று சிறந்து வாழ்வோம்:
அரிது, அரிது மானிடராய்
பிறத்தல் அரிது! கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ள இந்த பூமியில், மனிதன்
மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன். அவனே வாழ்க்கையின் பயனை ஆராயவும்,
தெளிந்து உயர் வழியைத் தெரிவு செய்து, தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,
அறிவும், ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருக்கிறான். இத்தகைய சிறப்புக்களைப்
பெற்றிருக்கிற மனிதனின் இன்றைய நிலை என்ன?



கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், மனித வாழ்க்கையில் முன் எப்போதும் இருந்ததை
விட, அதிக முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், தொழில்
நுட்பம் தொலைத்தொடர்பு, கணினி எனப் பல துறைகளும், பிரமிக்கத்தக்க வளர்ச்சி
அடைந்துள்ளன. அதனால், வாழ்க்கை வசதிகள் பெருகி விட்டன.



ஆனால், செய்தித்தாளைப் பிரித்தால், நாம் படிக்கும் செய்தி என்ன?



-சாந்தி நிகேதன் பள்ளியில், ஒரு மாணவன் தன் சக மாணவனைச் சுட்டு விட்டான்.



-12ம் வகுப்புத் தேர்வில், தோல்வியுற்ற மாணவன் தற்கொலை.



- ஒரு பொறுப்புள்ள நிறைய சம்பாதிக்கிற அரசாங்க அலுவலர், ஒரு காரை திருடி விட்டார்.



- மன உளைச்சல், மன அழுத்தக் கோளாறுகளால், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, வருடத்திற்கு வருடம் உயர்ந்து வருகிறது.



-பிறருடன் ஒத்துப் போகும் இயல்பு, நேர்மை, ஒழுக்கம், இவையாவும்
குழந்தைகளிடம் வளர்க்க வேண்டுமென்று எல்லாரும் அறிந்திருக்கிறோம். ஆனால்,
நடைமுறையில் பள்ளிகளில் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதில், அதிகம்
கவனம் செலுத்த வேண்டியிருப்பது, சமுதாயக் கட்டாயமாக இருப்பதையும்
பார்க்கிறோம். ஒழுக்கம், நேர்மை என்ற நெறிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு,
எப்படியாவது, எந்த வழியிலாவது, வெற்றி, வசதி, செல்வம், புகழ் ஆகியவற்றை
அடைந்து விட வேண்டும் என்பதே இன்றைய நடைமுறையாக இருக்கிறது.



மாணவர்கள் நிறைய படிக்கின்றனர்; பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால்,
அவர்களிடம் நேர்மையும், ஒழுக்கமும், சற்று குறைவாக இருக்கிறது. சமூக
வாழ்வில் வன்முறை, பயங்கரவாதம், போட்டி மனப்பான்மை போன்ற, மனப்பாங்குகள்
மலிந்து, மனித வாழ்க்கை நிம்மதியின்றி ஓடிக் கொண் டிருக்கிறது. இந்த
நிலைமாற, சமுதாயத்திலும், தனி மனித வாழ்க்கையிலும், அமைதியும்,
மகிழ்ச்சியும் மலர என்ன செய்ய வேண்டும்? அனைத்துக் கல்வியும் முதலில்
ஒழுக்கம் சார்ந்ததாகவும், அதற்குப் பின்பே அறிவு சார்ந்ததாகவும் இருக்க
வேண்டும் என்று கூறுகிறார் ஜான் ரஸ்கின்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us