UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 10:14 AM
இப்போது அவர் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். சந்தியா பிரகாஷ் ஜாதவ்(49), தற்போது மகாராஷ்டிராவிலுள்ள யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
இவரது வாழ்க்கை சோகமயமானது என்றாலும் நம்பிக்கை இருந்தால் ஜெயித்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக இவர் திகழ்கிறார். எல்லாப் பெண்களையும் போலவே இவருக்கும் 19 வயதில் திருமணம் நடந்தது. ஆரம் பத்தில் நன்றாக இருந்த மணவாழ்க்கை கணவனின் கொடுமைகளால் நரகம் ஆனது. மூன்று பிள்ளைகளுக்குத் தாயான பின் கணவனது கொடுமை தாங்காமல் அவரை விவாகரத்து செய்து விட்டு குழந்தைகளுடன் பிறந்தவீட்டுக்கு வந்து விட்டார் சந்தியா.
புகுந்த இடத்தில் ஆதரவில்லை என்றால் பிறந்த இடத்திலும் தந்தை அவருக்கு ஆதரவளிக்கவில்லை. வெறுத்துப்போன சந்தியா, வேறு ஒரு இடத்தில் வாடகை வீட்டில் குடியிருந்துவந்தார். பிழைப்புக்கு வீட்டுக்கு வெளியே டீ கடை நடத்தி வந்தார். அப்போதுதான் பிரகாஷ் ஜாதவ் என்பவர் சந்தியாவைச் சந்தித்துள்ளார். இருவரது மனமும் ஒத்துப்போகவே, மணம் புரிந்து கொண்டனர்.
வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலரத்தொடங்கிய நேரம். அந்தப் பகுதி பண்ணையார் சந்தியாவை அடைய விரும்பினார். ஒரு நாள் கணவர் வெளியே போயிருந்த போது, பண்ணையார் அவரது அடியாட்களுடன் சந்தியா வீட்டுக்குள் புகுந்து அவரைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கிறார். தன்னைக் காக்க வேண்டிய அந்த நிர்பந்தமான சூழலில் சந்தியா அந்தக் கும்பலில் ஒருவனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டார். கும்பல் மிரண்டு ஓடிப்போய் விட்டது.
கொலை வழக்கில் சந்தியாவுக்கு மும்பை ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சந்தியா சுப்ரீம் கோர்ட் டில் வழக்கிட்டார். சுப்ரீம் கோர்ட் அவரது தண்டனைக் காலத்தை ஏழாண்டுகளாகக் குறைத்தது. இந்த ஏழாண்டுகளில் சிறையிலிருந்தபடியே சந்தியா சமூகவியல், மராத்தி பிரிவுகளில் இளநிலைப் பட்டத்தை முடித்தார். சந்தியாதான் பட்டப்படிப்பு முடித்த முதல் பெண் கைதி.
அதனால் பட்டமளிப்பு விழாவின் போது சவான் பல்கலையின் துணைவேந்தர் சந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்.சந்தியாவுக்காக ஒரு பணியிடம் உருவாக்கப்பட்டது. இப் போது பல்கலையில் வந்துபோகும் கடிதங்கள் உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகிறார் சந்தியா.
சிறைக் கைதிகள் வெளியே வந்தபின் திருந்தி வாழ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் வழிகாட்டியுள்ளோம் என்கிறார் துணைவேந்தர்.
