UPDATED : டிச 27, 2009 12:00 AM
ADDED : டிச 27, 2009 03:27 PM
பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள் மற்றும் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, வினா - விடை புத்தகங்களைத் தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. பாடநூல் ஆசிரியர் குழுவே, வினா - விடை புத்தகங்களையும் தயாரிப்பதால், மாணவர்கள் மத்தியில் இந்த புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
தேர்வு வினாக்கள் அமையும் விதம், அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள், வினாக்களுக்குரிய பதில்களை எழுதும் விதம் ஆகியவை குறித்து, இந்த வினா - விடை புத்தகங்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர். அதனால், வினா - விடை புத்தகங்களை வாங்குவதற்காக, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்திற்கு, தினமும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, பத்தாம் வகுப்பு தமிழ் வழியிலான அனைத்து பாடங்களுக்கான வினா - விடை புத்தகங்களும், பிளஸ் 2வில் கணக்கு தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) மற்றும் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. குறிப்பிட்ட பாடங்களுக்கான வினா - விடை புத்தகங்கள் இருப்பு இல்லை என்று, பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. தினமும் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்திற்கு போன் செய்து, புத்தகங்கள் இருப்பு குறித்து கேட்கின்றனர். இல்லை என்று பதில் கூறுவதே, அலுவலர்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.
தேவைப்படும் வினா - விடை புத்தகங்களை அச்சிட்டு தரும் பொறுப்பு, பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன் தெரிவித்த போதும், இதுவரை புத்தகங்கள் வந்து சேரவில்லை என்று, துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தகங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து, அனைத்து வினா - விடை புத்தகங்களும் தாராளமாக கிடைக்கும் என்று, நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வினா - விடை புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
