UPDATED : ஜன 01, 2010 12:00 AM
ADDED : ஜன 01, 2010 11:26 AM
தேனியில் உள்ள கவின் கலை பட்டதாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் அய்யாவு என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள கவின் கலை கல்லூரிகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அங்கீகரித்துள்ளது. அரசுத் துறைகளில் நியமனம் செய்ய இவர்களை அங்கீகரித்துள்ளது. எனவே, இந்த இரண்டு கல்லூரிகளில் பட்டம் பெறுபவர்கள், ஓவிய ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் பெற தகுதியுள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனரகம் மூலம் நடத்தப்படும் மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே, பள்ளிகளில் கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கவின் கலை கல்லூரிகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பொதுவாக பரிசீலிக்கப்பட தகுதியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
தற்போது, பள்ளிகளில் 231 ஓவிய ஆசிரியர்கள் பணியிடங்களில் நியமனம் செய்ய, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து விவரங்களை பள்ளி கல்வி இயக்குனரகம் கேட்டுள்ளது. மேலும், ஓவிய ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்க, கவின் கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு தகுதியுள்ளதா என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத் தலைவரிடம், பள்ளி கல்வி இயக்குனரகம் கேட்டுள்ளது.
தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த அரசாணையின்படி, வேலை வாய்ப்பில் கவின் கலையில் பட்டம் பெற்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் 6ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குனரகம் விவரங்களைக் கேட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு விடை காணும் முன், மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்தவர்களை கொண்டு 231 பணியிடங்களும் நிரப்பப்பட்டு விடும். எனவே, மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்தவர்களை கொண்டு, 231 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். பள்ளிகளில் 231 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்க டி.என்.பி.எஸ்.சி., பள்ளிக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
