பள்ளிக்கு வராத குழந்தைகள் தேடி அலையும் பயிற்றுனர்கள்
பள்ளிக்கு வராத குழந்தைகள் தேடி அலையும் பயிற்றுனர்கள்
UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 04:02 PM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத மாணவ, மாணவியர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று, விசாரித்து மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், சமக்ரா சிகஷா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், பள்ளி வயதில் உள்ள அனைத்து குழந்தைகளையும், கண்டிப்பாக பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராமல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரச் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிக்கு செல்லும் ஆசிரிய பயிற்றுனர்கள், அங்குள்ள ஆசிரியர்களின் உதவியோடு, பள்ளிக்கு வராத குழந்தைகள் யார், யார் என்பதை தெரிந்து கொண்டு, பட்டியலை தயாரித்து, அவர்கள் முகவரி பெற்று, குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களது பெற்றோரை சந்தித்து மீண்டும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், அரசால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால் விளையும் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
