ஆசிரியர்கள் கற்பித்தல் தரத்தை மதிப்பீடு செய்ய மாணவர்கள்
ஆசிரியர்கள் கற்பித்தல் தரத்தை மதிப்பீடு செய்ய மாணவர்கள்
UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 09:40 AM
சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்களின்கற்பித்தல் தரத்தை, பி.எட்., மாணவர்கள் வழியே மதிப்பீடு செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதற்கு, ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, எண்ணும், எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம், 5ம் வகுப்பு வரை அமலில் உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக கற்பித்துள்ளனரா என, மூன்றாம் நபர் வாயிலாக மதிப்பீடு செய்ய உள்ளோம்.இந்த மதிப்பீட்டுக்கு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி பி.எட்., மாணவர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வரும் 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அரசு பள்ளிகளில் ஆய்வுக்குசெல்ல கல்லுாரிகள் அனுமதிக்க வேண்டும். மதிப்பீட்டாளர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சியும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.அவமானப்படுத்தும் செயல்
எண்ணும், எழுத்தும் திட்டமே வெறும் விளம்பரத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது; உண்மையில் பின்னடைவையே சந்தித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களின் கற்பித்தலில் நம்பகத்தன்மை இல்லாமல், கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை வைத்து, மூன்றாம் நபர் மதிப்பீடு செய்யும்படி பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் சமுதாயத்தை அவமானப்படுத்த ஒரு எல்லையே இல்லையா. மதிப்பீட்டுக்கு வரும் மாணவர்களை கண்டுகொள்ள மாட்டோம்; அனுமதிக்கவும் மாட்டோம் என அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலர் செயலர், அண்ணாமலை கூறியுள்ளார்.
