நிகர்நிலை பல்கலை விவகாரம் விஸ்வரூபம்: விடுமுறை அறிவிப்பு
நிகர்நிலை பல்கலை விவகாரம் விஸ்வரூபம்: விடுமுறை அறிவிப்பு
UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:20 PM
சென்னை: நிகர்நிலைப் பல்கலை பிரச்னை காரணமாக, மாணவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. சேலம் மற்றும் தஞ்சையில் ஆவேசம் அடைந்த மாணவர்கள், கல்லூரி பொருட்களை அடித்து நொறுக்கினர்.
சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலை நிர்வாகம் சார்பில், ‘முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அண்ணா பல்கலை அங்கீகாரம் பெற்ற சான்றிதழும், இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலை சான்றிதழும் வழங்கப்படும்’ என தெரிவித்ததாக மாணவர்களிடம் தகவல் பரவியது.
‘அனைத்து மாணவர்களுக்கும் அண்ணா பல்கலை சான்றிதழ் வழங்கப்படுமா’ என்ற மாணவர்கள் தரப்பு சந்தேகத்துக்கு, பல்கலை சார்பில் பதில் தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சாலை மறியல், கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். கல்லூரி கட்டடங்கள் மீது கல் வீசியதில், விடுதி கண்ணாடிகளும், கல்லூரி முகப்பு கண்ணாடிகளும் சேதமடைந்தன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையோரம் இருந்த பைப், கற்களை உடைத்து, சாலையின் குறுக்கே வீசினர்.
கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மல்லூர் இன்ஸ்பெக்டர் திருநீலகண்டன் தலைமையிலான போலீசார், மாணவர்களிடம் பேச்சு நடத்தியும் பலனில்லை. வேறு வழியில்லாமல், மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது, மாணவர்கள் கல் வீசியதில், எஸ்.ஐ., ஆனந்தன், ஏட்டு சந்திரசேகரன் உள்ளிட்ட மூன்று போலீசார் காயமடைந்தனர். போலீஸ் காரின் பின் ஜன்னல் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது.
எதிர் தாக்குதலால் ஆத்திரமடைந்த போலீசார், ஒளிந்திருந்த மாணவர்களையும் தேடிப் பிடித்து தடியடி நடத்தினர். பதட்டத்தை தணிக்க, அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை மோசமானதால், பல்கலை நிர்வாகம் வரும் 25ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, அனைத்து மாணவர்களும் கிளம்பிச் சென்றனர்.
தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலை மாணவர்களும், நேற்று ரகளையில் ஈடுபட்டனர். கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள், ஏ.டி.எம்., கண்ணாடி போன்றவைகளை மாணவர்கள் சேதப்படுத்தினர். பின், கல்லூரியை விட்டு வெளியேறி, மாணவர்கள் கோஷம் எழுப்பினர். தகவலறிந்து, ஆர்.டி.ஓ., ரவீந்திரன், ஏ.எஸ்.பி., மகேஷ்குமார், டி.எஸ்.பி., வசுந்தரா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாணவர்கள், டி.எஸ்.பி., வசுந்தரா ஜீப் கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த போலீசார், மாணவர்கள் மீது லேசாக தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர். இதற்கிடையே, கல்லூரி நிர்வாகத்துடன் ஆர்.டி.ஓ., ரவீந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். ‘பிரச்னை அதிகமாகாமல் தவிர்க்க வேண்டும். விடுதியில் உள்ள மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கி, அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கல்லூரிக்குள் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என ஆர்.டி.ஓ., கேட்டுக் கொண்டார்.
பிரிஸ்ட் பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘இந்திய அளவில் 44 பல்கலைக்கு இதுபோன்ற பிரச்னை உள்ளது. அதில், நாங்களும் ஒருவர். மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது. நிர்வாக முடிவின்படி, பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்படுகிறது’ என்றார். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
