தமிழில் பிழையின்றி எழுத அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
தமிழில் பிழையின்றி எழுத அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
UPDATED : ஜன 22, 2010 12:00 AM
ADDED : ஜன 22, 2010 11:57 AM
கோவை: தமிழில் அரசு ஆவணங்கள், சுற்றறிக்கைகளை பிழையின்றி எழுதுவது, பராமரிப்பது போன்ற விஷயங்கள் பற்றி அனைத்து மாவட்ட அரசு அலுவலக பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்க, தமிழ் வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் கையாளப்படும் பல முக்கிய ஆவணங்கள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள் சுற்றி வளைத்து விஷயத்தை விளக்குபவையாகவும், எழுத்து, வாக்கிய பிழைகளுடனும் உள்ளன. சாதாரண மனிதனால் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உள்ளதால், இவற்றை தவறின்றி எழுதவும், எளிதில் புரிந்து கொள்ளும்படி மாற்றியமைக்கவும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழ் வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, இதற்கான முதல் கட்ட பயிற்சி நேற்று கோவையில் துவங்கியது. கோவை அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் நடந்த பயிற்சி துவக்க விழாவில், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
விழாவில் மாநகராட்சி துணை ஆணையர் சாந்தா பேசுகையில், “இன்று பல அரசு அலுவலகங்களில் சாதாரண கடிதங்களை தமிழில் ‘டிராப்ட்’ போடுவதற்கு கூட சிரமப்படுகின்றனர். மனதை செலுத்தி எவரும் பணிபுரிவது இல்லை. சிரத்தையுடன் பணிபுரிவதில்லை. அரசு அலுவலர்கள் தயாரிக்கும் கடித ஆவணங்களில் ஒருபோதும் திருத்தம் வரக்கூடாது. கோர்ட் வரை செல்லுபடியாகும் விதத்தில் தயாரிக்க வேண்டும். இதனால் கோப்புகள், சுற்றறிக்கைகள் தயாரிக்கும் போது அதிக கவனம் தேவை. அப்போதுதான் அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். தமிழில் பலவீனமாக உள்ள அலுவலர்களை தேர்வு செய்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை பயிற்சி அளிக்க வேண்டும். அலுவலக கண்காணிப்பாளர்கள் புதிய ஊழியர்களுக்கு கற்றுத் தர வேண்டும்,” என்றார்.
கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் பேசுகையில், “தமிழ் அனைவரின் ரத்தத்துடன் கலந்து விட்ட மொழி என்பதை மறந்து விடாமல், அன்றாட பயன்பாட்டில் தவறுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.
மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தேவதாசு கூறுகையில், “அடுத்தகட்டமாக மதுரையில் ஜன. 22, 23 ஆகிய நாட்களிலும், நீலகிரி மாவட்டத்தில் பிப். 11, 12 தேதிகளிலும் பயிலரங்கம் நடைபெறும். கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, பயிற்சியின் துவக்க விழா இங்கு நடைபெறுகிறது,” என்றார்.
சேலம் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ராசேந்திரன், மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பசும்பொன், திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இப்பயிலரங்கம் இன்று நிறைவு பெறுகிறது.
