தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பில் பாரதியார் பல்கலை சாதனை

ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பில் பாரதியார் பல்கலை சாதனை

ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பில் பாரதியார் பல்கலை சாதனை


UPDATED : ஜன 22, 2010 12:00 AM

ADDED : ஜன 22, 2010 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2010 12:00 AM ADDED : ஜன 22, 2010 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ராணுவ வீரர்களின் நீண்ட நேர தகவல் தொடர்புக்கு உதவும் லித்தியம் பேட்டரி செல்களை வடிவமைத்து கோவை பாரதியார் பல்கலையில் உள்ள ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சாதனை புரிந்துள்ளது.


இந்திய ராணுவ வீரர்கள் உயரமான மலைப் பிரதேசங்கள், ஆழமான பள்ளத்தாக்குகளில் பல மணி நேரம் தொடர்ந்து பணிபுரிய வேண்டியதுள்ளது. மலைச்சிகரங்களில் பெரும் சுமைகளுடன் ஏற வேண்டியதுள்ளது. இந்த காலகட்டங்களில் உயரதிகாரிகள், ராணுவ தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள தற்போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அதிக எடையுள்ளதாகவும், விரைவில் சார்ஜ் தீர்ந்து விடுவதாகவும் உள்ளது.


இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி, பாரதியார் பல்கலையில் உள்ள டி.ஆர்.டி.ஓ., மையத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதன் முடிவில் தற்போது எடை குறைந்த, மெல்லிய, லித்தியம் பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மைய(டி.ஆர்.டி.ஓ) இயக்குனர் பாலசுப்ரமணியம் இது பற்றி கூறியதாவது:
புதிய வகை பேட்டரிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப, மூன்று மாதங்கள் வரை கூட தாக்குப்பிடிக்கும். 2.0 முதல் 4.0 வால்ட்டுகள் வரை சக்தி கொண்டவை. முழுக்க, முழுக்க இந்திய தொழில் நுட்பத்தால் உருவானவை என்பதும், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.


இதன் அளவை நானோ தொழில் நுட்ப உதவியுடன் இன்னும் சிறிதாக்க அடுத்தகட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளோம். அதன் பின் பயாலஜிக்கல் செல்களை பயன்படுத்தி மேலும் சிறிதாக்கவும் முடியும். இத்தொழில் நுட்பம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ராணுவத்துக்கு தேவைப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படலாம். இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.


இது பற்றி பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், “பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில்(டி.ஆர்.டி.ஓ) தற்போது 20 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவத்துக்குத் தேவையான சில அத்தியாவசிய வசதிகளுக்கான தொழில் நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது 27 திட்டங்களை செயல்படுத்த 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வு முடிக்கப்பட்ட ஐந்து கண்டுபிடிப்புகளுக்கு சமீபத்தில் ‘பேடன்ட்’ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது நீண்ட நேர தகவல் தொடர்புக்கு உதவும் புதுரக லித்தியம் பேட்டரியை டி.ஆர்.டி.ஓ., ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us