பல்கலையில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மைய ஆய்வகம் துவக்கம்
பல்கலையில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மைய ஆய்வகம் துவக்கம்
UPDATED : ஜன 22, 2010 12:00 AM
ADDED : ஜன 22, 2010 12:08 PM
கோவை பாரதியார் பல்கலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் 20 கோடி மதிப்பிலான ஆய்வரங்கத்தின் துவக்க விழா பிப். 2ம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பங்கேற்று திறந்து வைக்கிறார்.
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்துக்குத் தேவையான சில தொழில் நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மையம், கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கும் பாரதியார் பல்கலைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இம்மையத்தை திறந்து வைத்தார். இம்மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன ஆய்வரங்கம், ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றின் துவக்க விழா, பிப்., 2ல் நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி துவக்கி வைக்கிறார். இத்துடன், இம்மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் தங்குவதற்கென 500 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள விடுதிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் சரஸ்வத், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் செல்வமூர்த்தி, இளங்கோவன், சிவதாணுப்பிள்ளை, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இத்தகவலை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
