தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல்

திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல்

திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல்


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலையில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 83 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
இதில், ஒரு லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.

சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி, வேலூர் திருவள்ளுவர் பல்கலை, காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரி, திருவண்ணாமலை கம்பன் கல்லூரி, விழுப்புரம் அரசு கல்லூரி, விழுப்புரம் தெய்வாணை அம்மாள்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மையங்களில் டிச., 22ம் தேதி முதல் நடந்தது.

கடலூர் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் கடலூர், திண்டிவனம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் முறைகேடுகள் செய்துள்ளதாக குறிப்பிட்டு, இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், ஜன., 4ம் தேதி கடலூர் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சில பேராசிரியர்களால் வினியோகிக்கப்பட்டது.

இதற்கு, தேர்வுத்தாள்கள் திருத்தும் முகாம் அலுவலரான கல்லூரி முதல்வர் ரட்சகர், ஆட்சேபனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையால், விடைத்தாள் திருத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து விசாரித்த திருவள்ளுவர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) அமுல்தாஸ், செயின்ட் ஜோசப் கல்லூரியில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்தார்.

இப்பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும், அந்தந்த கல்லூரிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற ஆறு மையங்களிலும், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எவ்விதமான தடங்கல் இன்றி நடந்து முடிந்தது. ஆனால், பிரச்னைக்கு காரணமாக கடலூர் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. இதனால், தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 70 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படச் செய்து, மீண்டும் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்க பல்கலை இது வரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டால், பல்கலையில் மே மாதம் நடத்த வேண்டிய ஆண்டுத் தேர்வுகளில் கால தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us