பாடத்திட்ட தயாரிப்பில் அரசு தலையீடு இருக்கக் கூடாது
பாடத்திட்ட தயாரிப்பில் அரசு தலையீடு இருக்கக் கூடாது
UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 07:56 PM
பிரதமரின் மனதின் குரல் 106 வது நிகழ்ச்சியில் நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வாளர் அ.கா. பெருமாள் பாராட்டப்பெற்றார். அவர் கூறியதாவது:
நாட்டார் வழக்காற்றியல் துறையில் கதை சொல்லுதல் மரபை குறித்து பிரதமர் கூறியதற்கும், என்னை பாராட்டியதற்கும் நான் மிகுந்த மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவிக்கிறேன். ஆராய்ச்சியாளனுக்கு அங்கீகாரம் என்பது முக்கியம். அதிலும் எந்த சிபாரிசும் இல்லாமல் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு சந்தோசமடைகிறேன். இதை உயரிய விருதுகளை விட சிறந்ததாக கருதுகிறேன்.படிக்கும் பழக்கம் குறைகிறது என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் புத்தக சந்தைகளில் அதிக புத்தகங்கள் விற்பனையாகிறது. பெரும்பாலும் நவீன இலக்கியங்கள் சார்ந்த புத்தகங்களை இளைஞர்கள் படிக்கிறார்கள். பண்பாடு, கலாசாரம், மானுடவியல், நாட்டார் வழக்காறு இது போன்ற துறை சார்ந்த புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. தொல்லியல், அகழ்வாராய்ச்சி புத்தகங்களை 40 வயதுக்கு கீழ் பட்டவர்கள் படிக்கிறார்கள். மிக தொன்மையான பண்பாட்டை கொண்ட மொழியை இது மோசமான நிலைக்கு இட்டு செல்லும் என்று நினைக்கிறேன்.தற்போது கல்வியின் தரம் குறைந்துள்ளது என்றுதான் அனுபவம் உள்ள ஒரு ஆசிரியர் கூறுவார். எட்டு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்தால் அப்போதுள்ள அரசியல் நிலையை தெரிந்து கொள்ளலாம்.1930ல் திருவிதாங்கூர் அரசின் உத்தரவு படி திருவனந்தபுரம் பல்கலை கழகத்தில் பாட திட்ட தயாரிப்பு கூட்டம் கவிமணி தலைமையில் நடைபெற்ற போது பாட திட்டம் தயாரிப்பில் அரசு தலையீடு இருக்க கூடாது என்று கூறியது பதிவாகியுள்ளது. அவர் சொல்லி 95 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நிலைமை அப்படிதான் உள்ளது. தன்னாட்சி கல்லுாரி ஒரு மதம் சார்ந்திருந்தால் அந்த மதம் சார்ந்தவரின் புத்தகத்தைதான் எடுத்துக்கொள்கிறார்கள். அரசின் தலையீடு இருப்பதால் நல்ல பாடத்திட்டங்களை கொண்டு வர முடிவதில்லை.கதை சொல்லும் மரபு நம் நாட்டில் பழங்குடியினரிடம் அதிகம் இருந்துள்ளது. தொழில், காடு, வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை கதைகள் ஏற்படுத்தும்.இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் தமிழ் மரபுகள் பலவும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.ஆசிரியரிடம் சென்று பாடம் படிப்பது அப்போது கிடையாது. கதை வழியாக மரபுகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மரபு சார் கல்வி அழிந்து வருவதற்கு அரசை மட்டும் காரணம் சொல்ல முடியாது. பெற்றோர், கல்வியாளர்கள் என எல்லோரும்தான் காரணம். தற்போது படிப்பு என்பது பணம் சார்ந்து உள்ளது. இந்த நிலை உருவான பிறகு மரபு இல்லாமல் ஆகி வருகிறது. இது நல்ல சமூகத்திற்கு நஷ்டம். எதிர்காலத்தில் இதன் விளைவு தெரியவரும்.ஆனால் மரபுசார் தொழில்கள் அழிவதை கவலை கொள்ள வேண்டியது இல்லை, அது நவீன காலங்களுக்கு ஏற்ப மாற்றமடையும். முந்தைய தலைமுறையில் மரபுசார்ந்த கதைகள் சொல்லி வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையும், உறவையும் வளர்த்த தொன்மங்கள் அழிந்து வருவதால் வரும் காலங்களில் உறவு முறை மோசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
