திருட்டுத்தனமாக விற்கப்படும் போதை பொருட்கள்: பெற்றோர் பரிதவிப்பு!
திருட்டுத்தனமாக விற்கப்படும் போதை பொருட்கள்: பெற்றோர் பரிதவிப்பு!
UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 10:34 AM
பல ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து பெட்டிக்கடைகளிலும் பான்பராக் எனப்படும் ஒருவித பாக்கு அறிமுகமானது. இதற்கு பலரும் அடிமையாகினர். இதன் மூலம் பலருக்கும் வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு அதிக மருத்துவ செலவு, உயிரிழப்பு என ஏற்பட்டதை தொடர்ந்து விழித்து கொண்ட அரசு, இத்தகைய பொருட்கள் விற்பனையை தடை செய்தது.ஆனாலும் இதன் மூலம் வருமானம் பார்த்த, பார்க்கும் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தவில்லை. மாறாக கள்ளச்சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றன. தீய பழக்கத்தின் அடுத்தகட்ட பரிமான வளர்ச்சியாக சிலர் கஞ்சா போன்ற கொடிய போதை பழக்கங்களிலும் சிக்கி அடிமையாகி தங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் சிதைக்கின்றனர்.மாட்டின் தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக அரசு நிர்வாகம் தற்போது போதை பாக்கு, புகையிலை விற்பனையை தடுக்க கடும் முயற்சி எடுத்து வருகிறது. இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரும் போது கிடைக்கும் ரகசிய தகவல்களால் ஒருசில கும்பல்கள் சிக்கினாலும், சிக்காமல் செல்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.ஒரே ஒருமுறை பயன்படுத்தி பார்த்தால் என்ன என நினைப்பது, மேலும் இவ்வாறான தீய பழக்கங்களில் முதலில் சிக்கி பின்னர் வெளியேற முயன்று முடியாமல் போன நபர்கள் தானும் கெட்டு, தங்களுடன் பழகும் நண்பர்களுக்கும் பரப்புகின்றனர்.தங்கள் குழந்தைகள் நன்கு படித்து சம்பாதித்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால் தவறான நண்பர்கள் மூலம் தீய பழக்கங்களை கற்று கொண்டு தங்கள் குழந்தை சீரழிவு பாதையில் பயணிப்பது கண்டு பெற்றோர் மனதளவில் நொறுக்கி போகின்றனர். அரசு நிர்வாகம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்கிற சிக்கலான சமூக சீரழிவு பிரச்னையை பெற்றோராக என்ன செய்து தடுக்க முடியும் என பலரும் புலம்புகின்றனர்.
