வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க குழந்தைகள் நாள் விழா
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க குழந்தைகள் நாள் விழா
UPDATED : நவ 12, 2023 12:00 AM
ADDED : நவ 12, 2023 05:04 PM
வாஷிங்டன்:
நாளைய உலகின் நட்சத்திரங்களை இன்றே அருகினில் ஒளி மின்னும் விளக்குகளாக்கி பற்பல கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, சதுரங்கப்போட்டி என மட்டுமல்லாது சிறுவர்கள் வெளியில் செய்த இளம் சாதனைகளையும் அங்கீகரித்து தன் திறமைகளை வெளிக்கொணர்ந்து மகிழ்விக்கக் குழந்தைகள் நாள் விழா வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நவம்பர் ஐந்தாம் நாளில் இனிதே நடைபெற்றது.இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் மற்றும் நலனுக்காகக் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இளம் உறுப்பினர்களின் திறமைகள், கனவுகள் மற்றும் எதிர்கால ஆசைகளை வளர்ப்பதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதில் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். குழந்தைகள் இச்சமுதாயத்தின் எதிர்காலம், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவது அவர்களின் நல்வாழ்வை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ்ச்சங்கத்தில், குழந்தைகள் நமது சமூகத்தின் எதிர்காலத்திற்கான பாலத்தைக் கட்டமைப்பதில் பெரியவர்களாகப் பெருமை கொள்கிறோ ம். எனவே, இந்த நாள் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பொறுப்புள்ள மற்றும் பண்புள்ள நபர்களாக வளரவும், பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களுக்குப் பாதுகாப்பான ஆற்றலை வளர்க்கும் சூழலை வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்நாள் நினைவூட்டுகிறது. நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வந்த பெற்றோர்களும் பெரியவர்களும் சிறுவர்களாக மாறி உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரமாக ஊக்கமளித்தனர்.இளம் உறுப்பினர்களை நிகழ்ச்சியில் ஈடுபடுத்தவும், பல கலைகள் கற்பிக்கவும், மகிழ்விக்கவும் வடிவமைக்கப்பட்ட பல்வேறு செயல்பாட்டு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இந்நிகழ்ச்சிக்கு இளம் உறுப்பினர்களே நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக தன்னார்வத் தொண்டு புரிந்தனர்.வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பிரசுரிக்கும் தென்றல் முல்லை இதழ் இம்முறை இளம் ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பைக் கொண்டு தயாரித்து அச்சிட்டு வெளியிட்டு அவர்களைப் படைப்பாளிகளாக, சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ வலு சேர்க்கப்பட்டது. ஒரு புத்தகம் உருவாகுவது என்பது பலரின் கூட்டு முயற்சி என்பதை இளம் வயதிலேயே அறிந்து செயல்படத் தயாராகின்றனர். தமிழ்ப் பள்ளிகளின் சங்கமம் நிகழ்வின் மூலம் மேரிலாந்து மற்றும் வெர்ஜினியாவில் உள்ள பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மிகச் சிறப்பாக நடந்தேறியது. கொம்பு இசைக் குழுவினரின் பாரம்பரிய இசை அணிவகுப்பினரை மிரளவைத்து ஆட்டம் போடத் தூண்டியது.அமெரிக்கன் பாப்பையா அகத்தியன் அவருக்கு உரியப் பாணியில் தவிர்ப்போம் தமிங்கலம் என்ற பிறமொழி தவிர்த்து தனித்தமிழில் உரையாடும் போட்டியை நடத்தி எதிலும் தமிழ் எங்கும் தமிழ் என்ற வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். ஆசிரியர் பயிற்சிப்பட்டறை அனைத்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர்.வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவது வெறும் ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான பெரியவர்களின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். சிறார்களின் திறன், படைப்பாற்றல் மற்றும் கனவுகளைக் கொண்டாட ஒரு சமூகமாக ஒன்று கூடும் நாள் இது. தமிழ்ப் பண்பாட்டில் பெருமித உணர்வை ஊட்டுவதும், ஊக்கச்சூழலை வழங்குவதும், இளைய உறுப்பினர்களிடையே வலுவான சமூக மக்களை நேசிக்கும் தன்மை உடைய உணர்வையும் வளர்ப்பதே இக்கொண்டாட்டத்தின் நோக்கம். இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து, இன்றைய நமது முயற்சிகள் நமது தமிழ்ச் சமூகத்திற்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்.
