திருப்புவனத்தில் படிக்கட்டில் பயணம் அலட்சியம் காட்டும் மாணவர்கள்
திருப்புவனத்தில் படிக்கட்டில் பயணம் அலட்சியம் காட்டும் மாணவர்கள்
UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 10:02 AM
திருப்புவனம்:
திருப்புவனத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவர்கள் பலரும் அலட்சியமாக படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.திருப்புவனம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த கல்வி பயில்கின்றனர். திருப்புவனம் கிளை பணிமனை மூலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தினசரி காலை, மாலை என இருவேளையிலும் 44 அரசு பஸ்கள் பள்ளி நேரத்தை கணக்கிட்டு சென்று வருகின்றன. பஸ்கள் இயக்கப்பட்டாலும் மாணவர்கள் பலரும் ஆபத்தான வகையில் படிக்கட்டு பயணத்தையே விரும்புகின்றனர்.தட்டி கேட்கும் போக்குவரத்து கழக ஊழியர்களை கூட்டமாக சேர்ந்து கொண்டு மிரட்டுவது, மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பும் போது இருட்டில் நின்று கொண்டு கல் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். படிகட்டுகளில் பயணம் செய்வதுடன் ரோட்டில் நடந்து செல்பவர்களை கேலி செய்வது, தடுமாறச் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்யும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு மாணவர்கள் உடல் ஊனமடைவது தொடர்ந்தாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை.போலீசாரும் பள்ளி மாணவர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்ய யோசனை செய்கின்றனர். சென்னையில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்து விபத்தில் சிக்கிய மாணவனின் இரு பாதங்களும் அகற்றப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இதே போன்ற படிகட்டு பயணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே தமிழக அரசு படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
