நீலகிரியில் திரைப்பட பல்கலை நடிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
நீலகிரியில் திரைப்பட பல்கலை நடிகர்கள் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:44 AM
சென்னை:
நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில், முதல் திரைப்பட பல்கலையை உருவாக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன், அரசிடம் சமர்பித்துள்ள மனு:
நீலகிரி மாவட்டம், சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. அங்கு ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடித்த படங்கள் நீலகிரி மாவட்டத்தில் படமாக்கப்பட்டு, வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளன.அத்தகையை சிறப்பு மிக்க நீலகிரி மாவட்டத்தில், நாட்டிலேயே முதல் திரைப்பட பல்கலையை உருவாக்க வேண்டும். அதற்கு அதிக பொருட் செலவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அங்கு, திரைப்பட பல்கலை அமைக்க தேவையான கட்டடங்கள், தியேட்டர்கள், பெரிய அளவிலான வெளி அரங்குகள் உள்ளன. மாணவர்களுக்கான பயிற்சி கூடங்கள், விடுதிகளும் உள்ளன.இவை அனைத்தும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள, ஹிந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை வளாகத்தில் உள்ளன. மாணவர்கள் திரைப்படங்கள் தொடர்பாக ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள, இந்த பல்கலை முன்னோடியாக அமையும்.பிற மாநிலங்களில் திரைப்பட கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் வாயிலாக நடத்தப்படுகின்றன. நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் திரைப்பட பல்கலை இல்லை. அதை, தமிழகத்தில் அமைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். அரசு விரைந்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
